நேர்மையும் நடத்தையும் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும்: டெஸ்மண்ட் லீ

நேர்மையும் நடத்தையும் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும்: டெஸ்மண்ட் லீ

1 mins read
45d8955b-1d02-4a70-af50-3c24bb9021d7
திங்கட்கிழமை (ஜூலை 20) நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரு ஃபைஷால் இப்ராஹிமின் பதவி விலகல் குறித்து பேசிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்மையும் நடத்தையும் மிக உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்றும், அவற்றைச் சீர்குலைத்தால் அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் செயல் கட்சியின் தலைவர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

திரு ஃபைஷால் இப்ராஹிமின் பதவி விலகல் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 20) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் லீ, இவ்விதிமுறைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்.

நேரடித் தொடர்பாக இருந்தாலும், இணையம் வழி மேற்கொள்ளப்படும் உரையாடல்களாக இருந்தாலும், இரண்டிற்கும் சம விதிமுறைகளே பொருந்தும் என்று சுட்டிக்காட்டினார்.

மக்கள் செயல் கட்சி தன் உறுப்பினர்களுக்கு வைத்துள்ள உயர்தரக் கட்டுப்பாடுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஃபைஷாலின் பதவி விலகல் வேதனை அளித்தாலும், அதுவே சரியான முடிவு என்று திரு டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தொகுதிக்கு இடைத்தேர்தல் எதுவும் நடத்தப்படாது என்று அமைச்சர் லீ திட்டவட்டமாகக் கூறினார்.

முன்னைய ஜூரோங் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி சம்பவங்களைச் சுட்டிய அவர், “அங்குள்ள குடியிருப்பாளர்களின் தேவைகள் சரிவரக் கவனிக்கப்படுகின்றனவா என்பதுதான் முக்கியம்,” என்றார்.

“மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் மற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுதல் பொறுப்பேற்று, முன்னின்று கெம்பாங்கான் தொகுதி குடியிருப்பாளர்களைக் கவனித்துக்கொள்வர்,” என்று அவர் உறுதியளித்தார்.

குழுத்தொகுதியின் அணியை வலுப்படுத்துவதற்குக் கட்சி கூடுதல் ஏற்பாடுகளைச் செய்யும் என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்