தவறான இணையப் பதிவுகளுக்கு எதிரான ‘உண்மைத் தகவல் கட்டமைப்பு’

‘ஏஐ’ உதவியுடன் தயாரிக்கப்படும் பொய்யான காணொளிகளை முறியடிக்க முயற்சி

தவறான இணையப் பதிவுகளுக்கு எதிரான ‘உண்மைத் தகவல் கட்டமைப்பு’

2 mins read
57908f12-d07b-463c-a08b-c06270c39cd9
மூத்தோரைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து ஊடகங்களிடம் பேசினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உண்மைக்கு நிகரான தவறான இணையப் பதிவுகளைக் கையாள்வதற்குத் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவையா என்பதை ஆராய்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு, சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் தவறான சிந்தனைகளை ஊக்குவிக்கும் மோசடிக் காணொளிகள், இணைய உள்ளடக்கங்கள் அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.

‘லோராங் ஏஐ வளாகத்தில்’ வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற நேர்காணலில் இந்தியச் சமூகத்தினர் உட்பட மூத்தோரைக் குறிவைக்கும் தவறான தகவல்கள் குறித்துத் தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

“நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை அவை சிதைக்க முயல்கின்றன. சமூகத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையிலான செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்கள் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகத் திருப்புகின்றன,” என்றார் அவர்.

தேர்தலில் வேட்பாளர்களைத் தவறாகச் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததை அவர் நினைவூட்டினார்.

தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆகியவற்றால் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைச் சுட்டிய அவர், உள்துறை அமைச்சின் குழு அத்தகைய புதிய வகை உள்ளடக்கங்கள் குறித்தும் ஆராயும் என்றார்.

ஆனால் இவை குறித்த விழிப்புணர்வும் குறையக்கூடும் என்றும், தொடர்ச்சியான நினைவூட்டல்கள் மக்களைச் சோர்வடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பொதுச் சேவை ஊடகங்கள், சட்டம் என அனைத்தும் ஒருங்கிணைந்து ‘உண்மைத் தகவல் கட்டமைப்பை’ உருவாக்குவது அவசியம்,” என்றார் திருமதி டியோ.

தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் தொடர்ந்து பல்வேறு வளங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இணையத் தீங்குகளுக்கு எதிரான இணையப் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்படுவது குறித்துப் பேசிய அவர், “அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதியில் அது செயல்பாட்டுக்கு வரும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுமோசடிமூத்தோர்