ஈசூன் வீவக புளோக்கிலிருந்து $1,500 மதிப்பில் செடிகள் திருட்டு; ஆடவர்மீது குற்றச்சாட்டு

ஈசூன் வீவக புளோக்கிலிருந்து $1,500 மதிப்பில் செடிகள் திருட்டு; ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
93235da2-784d-4089-bfeb-7761d4f49946
புளோக் 418 ஈசூன் அவென்யூ 11லிருந்து செடித் தொட்டிகள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றிலிருந்து $1,500 மதிப்பிலான செடித் தொட்டிகளைத் திருடியதாக ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜூன் 5 முதல் 8 வரை அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புளோக் 418 ஈசூன் அவென்யூ 11லிருந்து 18 செடித் தொட்டிகள், இரு செடி அடுக்குகள், மூன்று பூந்தொட்டிகள் ஆகியவற்றைத் திருடியதாக லீ டி யுவான், 42, மீது வியாழக்கிழமை (ஜூன் 12) குற்றஞ்சாட்டப்பட்டது.

செடிகளில் இரண்டின் மதிப்பு தலா $388. ஒட்டுமொத்தமாக, லீ திருடியதாகக் கூறப்படும் பொருள்களின் மதிப்பு $1,514.

கடந்த வாரம் செடித் தொட்டிகள் திருடப்பட்டது குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் தனக்குக் கிடைத்ததாக காவல்துறை புதன்கிழமை கூறியிருந்தது. உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைமூலம் லீயின் அடையாளத்தை உறுதிசெய்து செவ்வாய்க்கிழமை அவரைக் கைதுசெய்தனர்.

திருடப்பட்ட பொருள்கள் பின்னர் மீட்கப்பட்டன. லீயின் வழக்கு ஜூன் 19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
செடிதிருட்டுகாவல்துறை