சிங்கப்பூரில் உள்ள இந்திய நாட்டுப் பெண்களுக்கு உதவ இந்தியத் தூதரகத்தின் புதிய திட்டம்

வன்முறை, பெருந்துயரை எதிர்கொள்ளும் இந்திய நாட்டுப் பெண்களுக்கு உதவ 24 மணி நேரச் சேவை

2 mins read
ce593e87-62b0-4956-a893-d5540b08aea9
வன்முறை, இடரில் சிக்கிக்கொள்ளும் இந்தியக் குடியுரிமை கொண்ட பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் ஒருசேர வழங்கும் இலக்குடன் அமைக்கப்பட்டுள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (ஒஎஸ்சி) ஒருங்கிணைந்த சேவை நிலையத்தைத் தொடங்கிவைக்கும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே. - படம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்

வன்முறை, இடரில் சிக்கிக்கொள்ளும் சிங்கப்பூரில் இருக்கும் இந்திய நாட்டுப் பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் ஒருசேர ஓரிடத்தில் வழங்கும் இலக்குடன்  ஒருங்கிணைந்த சேவை நிலையத்தை நிறுவியுள்ளது சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்.

‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (ஒஎஸ்சி) எனும் இந்தச் சேவை நிலையத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 15) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே.

பெண்கள் நலன் காக்கும் திட்டத்தை வெளிநாடுகளிலும் விரிவடையச் செய்யும் இந்திய அரசுக் கொள்கைகளின் முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.

நாடு கடந்து சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்கள் கடுந்துயரைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களது இன்னல்களைக் களைந்து ஆதரவளிக்கும் வகையில் சட்டம், மருத்துவம், மனநல ஆலோசனை, தற்காலிகத் தங்குமிடம் உள்ளிட்ட பல உதவிகளை நல்குவது திட்டத்தின் நோக்கம் என்று திரு ஷில்பாக் அம்புலே விளக்கினார்.

இந்தியத் தூதரகத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் உடல், பாலினம், பொருளியல் சார்ந்த துன்புறுத்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகும் இந்தியப் பெண்களுக்குத் தேவையான அவசரகால உதவி, உணர்வுபூர்வ மனநல ஆதரவு, மருத்துவப் பராமரிப்பு என உறுதுணையாக இருக்க குறிப்பிட்ட தொலைபேசி சேவை எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த 24 மணி நேர உதவிச் சேவையைப் பெற +65 8716 5521 எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது osc.singapore@mea.gov.in எனும் மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.

இந்திய வெளியுறவு அமைச்சால் வழங்கப்படும் இத்திட்டத்திற்கான நிதியாதரவை நல்குகிறது இந்திய சமூக நல்வாழ்வு நிதி. 

தாயகம் கடந்து வாழும் இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் இத்தகைய நிலையங்கள் ஏற்கெனவே பஹ்ரேன், கனடா, குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்