திருமண ஆலோசனைக்குச் செல்லும் இளம் ஜோடிகள் அதிகரிப்பு

திருமண ஆலோசனைக்குச் செல்லும் இளம் ஜோடிகள் அதிகரிப்பு

2 mins read
ee4bfcae-02c8-487e-b1ca-18e68c122a91
திருமண ஆலோசனை பெறுவதை உறுதிசெய்ய இளம் ஜோடிகள் சிலர் திருமணத்தைத் தள்ளிவைக்கின்றனர். - படம்: பிலேடைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் திருமணம் செய்துகொள்ளும்முன் ஆலோசனை பெற விரும்பும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை பெறாமல் திருமணம் முடிக்கக்கூடாது என்பதற்காக இளம் ஜோடிகளில் சிலர் கிட்டத்தட்ட ஓராண்டுவரை திருமண ஏற்பாடுகளை ஒத்திவைத்துள்ளனர்.

திருமண ஆலோசனை பெறும் இளையரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்தது என்று ஆலோசகர்கள் கூறினர்.

அவர்களில் பெரும்பாலோர், நிதி நிர்வாகம், வாழ்க்கைத்தொழில் இலக்குகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை நாடுகின்றனர்.

உறவுகள் குறித்த இளம் தலைமுறையினரின் புதிய கண்ணோட்டம்

மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைமீதான நாட்டம் அதிகரித்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உறவுகள்மீதான இளம் ஜோடிகளின் கண்ணோட்டமும் மாறியிருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், நீண்டகாலப் பொருத்தத்துக்கு இளைய தலைமுறையினர் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகப் பகிர்ந்துகொண்டனர்.

“ஜென் ஸி, மில்லெனியல்ஸ் போன்ற புதிய தலைமுறையினர் பிரச்சினை ஏற்படும்வரை காத்திருப்பதில்லை. முன்கூட்டியே அதற்கான தீர்வைக் கண்டறிய முற்படுகின்றனர்,” என்றார் மனநல ஆலோசகரும் ஆலோசனை வழங்கும் நிபுணருமான குமாரி ரேச்சல் செங்.

நிதி நிர்வாகம், வேலைப் பளு, வேலைப் பாதுகாப்பு, கல்வி, துணையாக வருபவர்களின் குடும்பத்தைச் சமாளித்தல், பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இளம் ஜோடிகள் அதிகம் நாடுவதாகக் குமாரி ரேச்சல் கூறினார்.

சிங்கப்பூர் ஆலோசனை நிலையத்தில், கொவிட்-19 காலகட்டத்திற்குப்பின் திருமண ஆலோசனையை நாடும் இளம் ஜோடிகளின் எண்ணிக்கை 10 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.

“நிதி தொடர்பான கருத்து வேறுபாடுகள் பல சண்டைகளுக்கு இட்டுச்செல்வதால் அதுகுறித்த அக்கறை இளைய தலைமுறையினரிடம் அதிகம் காண முடிகிறது,” என்றார் சிங்கப்பூர் ஆலோசனை மன்றத் தலைமை மனநல அதிகாரி டாக்டர் ஜான் லிம்.

திருமணத்திற்குமுன் ஆலோசனைகளை நாடுவோரிடையே திருமண முறிவு குறைவாக இருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக டாக்டர் லிம் சொன்னார்.

சிங்கப்பூரில் கடந்த 2024ஆம் ஆண்டு நிலவரப்படி முதல்முறை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் வயது 31.1 என்று பதிவானது. பெண்களிடையே அது 28.2லிருந்து 29.6 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திருமணம்ஆலோசனைஅதிகரிப்புஇளையர்