நொடித்துப்போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வரம்புக்கு மீறிய செலவு, வியாபாரத் தோல்வியின் எதிரொலி

நொடித்துப்போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
a874f184-54c9-487e-b3c7-aa9392661504
தனிமனிதர்கள் நொடித்துப்போன சம்பவங்கள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 482க்கு அதிகரித்தாகச் சட்ட அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: அடோபி ஸ்டாக்
multi-img1 of 2

சிங்கப்பூரில் நொடித்துப்போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் நொடித்துப்போன தனிமனிதர்களின் சம்பவங்கள் 482க்கு அதிகரித்தன. 2025ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்தில் அந்த எண்ணிக்கை 378ஆக இருந்தது என்று சட்ட அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பெரும்பாலானவர்கள் நொடித்துப்போவதற்கு ஐந்து முக்கியக் காரணங்கள் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குப் பேட்டியளித்த சட்ட அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“வரம்புக்கு மீறிப் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் செலவு செய்வது, வேலையின்மை அல்லது வேலையிழப்பு, வியாபாரத்தில் தோல்வி, தனிமனிதர் அல்லது வர்த்தகத்துக்கு கடன் வாங்க உத்தரவாதம் வழங்கியது, அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமான பணம் இல்லாதது ஆகியன ஐந்து முக்கியக் காரணங்களாகும்.

சிங்கப்பூரில் ஒருவர் நொடித்துப்போவதற்கு விண்ணப்பிக்கும்போது அல்லது கடன் கொடுக்கப்பட்டவரால் நொடித்துப்போனவராக அறிவிக்கக் கோரிக்கை விடுக்கும்போது அத்தகைய காரணங்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆண்டு அடிப்படையில் நொடித்துப்போனோரின் வயதில் மாற்றமில்லை என்பதைச் சட்ட அமைச்சு சுட்டிக்காட்டியது.

2016க்கும் 2025 செப்டம்பருக்கும் இடையே 12,238 நொடித்துப்போன சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் 40 முதல் 54 வயது வரையிலானவர்களே ஆக அதிகமாக இருந்தனர். அது, ஏறக்குறைய நொடித்துப்போனவர்களில் கிட்டத்தட்ட பாதி (47 விழுக்காடு).

நொடித்துப்போனோரில் 25க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டோரின் பங்கு, 29 விழுக்காடாக இருந்தது. 55 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் பங்கு, 24 விழுக்காடு. 24 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையோரின் பங்கு ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு (52 பேர்).

நொடித்துப்போவது என்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கடன் வாங்குபவர்கள் தங்களது கட்டுப்பாடுகளை மீறி கடன் சுமை அதிகரிப்பதற்கு முன்பே உதவி நாட வேண்டும் என்று ‘அடுல்லாம் லைஃப் கவுன்சிலிங்’ நிதித் திரட்டு நிர்வாகியான ஜீன் லீ ஆலோசனை கூறுகிறார்.

“கடன் குறைவாக இருக்கும்போது கடன்கொடுத்தோரிடம் பேசுவது எளிதாக இருக்கும்,” என்றார் அவர்.

ஆனால், சிலர் முன்வரத் தயங்குவதோடு பிரச்சினைக்குத் தாங்களாகவே தீர்வுகாண முயற்சி செய்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

“நீங்கள் இன்றைய பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்கள். அதற்குள் அது நாளைய பிரச்சினையாகிவிடுகிறது,” என்று திரு ஜீன் லீ சொன்னார்.

நொடிப்புச் சம்பவங்களைக் கையாளும் உரிமம் பெற்ற நிபுணர் ஜோனத்தன் ஓங், தாம் சந்தித்த பெரும்பாலான நொடித்துப்போன வழக்குகளில் கடனாளிகள் உதவி நாடுவதற்கு முன்பே கடன் வாங்குவதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

“அதனால், ​​அவர்களின் தனிப்பட்ட அல்லது வேலைவாய்ப்புச் சூழ்நிலையின் அடிப்படையில் கடனைத் திருப்பிச் செலுத்தவோ மறுசீரமைக்கவோ சாத்தியமில்லாமல் போய்விடும்,” என்று ‘எய்ஸ்னர் ஆம்ப்பெர் சிங்கப்பூர்’ என்ற ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநருமான திரு ஓங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்