சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டில் 479 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய ஆண்டில் பதிவான அத்தகைய 401 சம்பவங்களைக் காட்டிலும் அது அதிகம்.
அதோடு, மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கையும் 2024ல் பதிவான 1,427லிருந்து சென்ற ஆண்டு 1,531ஆக அதிகரித்தது.
ஒட்டுமொத்தத்தில், இணையம் தவிர்த்த மற்ற குற்றச் சம்பவங்களின் என்ணிக்கை 2024ல் 19,969லிருந்து 2025ல், 20,857ஆக உயர்ந்ததாக காவல்துறை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) வெளியிட்ட அதன் வருடாந்தர அறிக்கையில் தெரிவித்தது.
இணையம் தவிர்த்த மற்ற குற்றச்செயல்களில் 20 விழுக்காடு, கடைகளில் நடக்கும் திருட்டுகளாகும்.
மானபங்கச் சம்பவங்கள் கவலைக்குரிய அளவில் பதிவானதாகக் காவல்துறை கூறியது. அந்தச் சம்பவங்களில் பாதிக்கும் மேலானவற்றில், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளுக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
குடியிருப்பு இடங்கள், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், பொதுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், பேரங்காடிகளில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்ததாகக் காவல்துறை கூறியது.
இதற்கிடையே, கற்பழிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்தது. பெரும்பாலான சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளுக்கு அறிமுகமானவர்கள்.
புள்ளிவிவரங்கள் கவலைக்குரிய சூழலைக் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளும், நான்கு மானபங்கச் சம்பவங்கள், ஒரு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு மேல் நடக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மறைந்திருந்து தகாத படங்களை எடுக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் பதிவான 519 அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 486க்குக் குறைந்தது.
அத்தகைய சம்பவங்களில் பெரும்பாலானவை குடியிருப்பு இடங்கள், பேரங்காடிகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் நடந்தன.
அந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டது. அதோடு, குற்றம் புரிபவரின் தோற்றத்தையும் கவனிக்குமாறு அது அறிவுறுத்தியது.
அத்தகைய சம்பவங்களைக் கண்டால், காவல்துறையைத் தொடர்புகொள்ளவேண்டும். குற்றம் புரிபவர்களைத் தனியாக அணுகக்கூடாது என்று காவல்துறை கூறியது.
கத்தி சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சற்று அதிகமாயின. 2024ஆம் ஆண்டில் பதிவான 131 கத்தி சம்பந்தப்பட்ட சம்பவங்கள், 2025ஆம் ஆண்டில் 137க்குக் கூடியது.
சென்ற ஆண்டு ஏழு கொலைச் சம்பவங்கள் நடந்தன. 2024ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 10ஆக இருந்தது. ஐந்து கொலைச் சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குற்றவாளிகளைத் தெரியும்.

