ஆசிய - ஐரோப்பிய விமானச் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

ஆசிய - ஐரோப்பிய விமானச் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

2 mins read
9fda9ee1-708c-46ce-a4fa-bcff4ebed6db
பயண நேரங்கள் நீடிக்கலாம்; எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கலாம். அதனால், கட்டணங்கள் கூடலாம்.  - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மத்திய கிழக்கில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான விமானச் சேவைக் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

பல பிரபல விமானச் சேவைகளில் பல நாள்களுக்கு விமான நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதை விமான நிறுவன இணையத்தளங்கள் காட்டுகின்றன.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான சண்டையால், மத்திய கிழக்கில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக, நாளுக்கு 1,000 விமானச் சேவைகளைக் கையாளும் உலகின் ஆக பரபரப்பான துபாய் அனைத்துலக விமான நிலையம் உட்பட முக்கிய வளைகுடா நடுவங்கள் நான்காவது நாளாக (மார்ச் 3) மூடப்பட்டுள்ளன.

நெருக்கடிநிலை ஏற்பட்டதிலிருந்து அதன் கடைகளுக்கும் அவசர உதவித் தொடர்புகளுக்கும் வந்த அழைப்புகள் 75 விழுக்காடு கூடியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் விமானச் சேவை நிலையப் பயணக் குழுமம் கூறியது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதன் உலக நிர்வாகப் பிரிவு இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டார்க் கூறினார்.

இடைவிடா ஆசிய-ஐரோப்பிய விமானச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், மூடப்பட்டுள்ள மத்திய கிழக்கு ஆகாயவெளியைத் தவிர்த்து, ‘காக்கசஸ்’ வழியாக ஆப்கானிஸ்தான் அல்லது எகிப்து வழியாக சவூதிக்குச் சென்று பின்னர் ஓமானுக்குச் செல்லலாம். இருப்பினும், பயண நேரங்கள் நீடிக்கலாம்; எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கலாம். அதனால், கட்டணங்கள் கூடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆசிய-பசிபிக்கில் உள்ள விமான நிறுவனங்கள் வரும் வாரங்களில் பயன்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

“எஸ்ஐஏ, கெத்தே பசிபிக் போன்ற ஐரோப்பாவுக்குப் பல சேவைகளை வழங்கும் ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் குறுகியக் காலத்தில் பயன்பெறக்கூடும்,” என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் திரு டெரன்ஸ் ஃபான் கூறினார்.

பொதுப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ள ஆகாயவெளிகளில் ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், கத்தார், சிரியா, பஹ்ரைன் ஆகியவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்