உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழையும் மோட்டார் சைக்கிள்கள் மாசு ஏற்படுத்துகின்றனவா என்பதைச் சோதித்து அறியும் நடவடிக்கை மேம்படுத்தப்பட உள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்களது வாகனம் மாசு ஏற்படுத்துகிறதா என்பதற்கான சுயசோதனையை மேம்படுத்தும் நடவடிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சோதித்துப் பார்க்கப்படும்.
பல்வேறு சோதனை இயந்திரங்களில் ஓட்டுநர்கள் சுயசோதனை செய்வதைக் கண்காணிக்க ஓர் அதிகாரி இருப்பார் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
தொடக்கமாக, ஓர் இயந்திரத்தின் ஆற்றல் ஆராயப்படும். ஓட்டுநர்களின் சுயசோதனையை எந்த அளவுக்கு அது ஆற்றலுடன் கணக்கிடுகிறது என்பதையும் ஓட்டுநரின் அனுபவத்தையும் ஆராய்ந்த பின்னர் மேலும் அதிகமான இயந்திரங்கள் புழக்கத்திற்குக் கொண்டு வரப்படும்.
கடுமையான கரிமத் தடுப்புக் கட்டுப்பாடுகள் 2023ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த பின்னர் மோட்டார் சைக்கிள் மாசு கண்காணிப்பு முறை தொடங்கியது. நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்புகளை மீறுபவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய சோதனைக் கருவியை நிறுவுவதற்கான ஏலக்குத்தகைக்கு தேசியச் சுற்றுப்புற வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. வாரியத்தால் முன்மாதிரி சோதனைக் கருவிகளை வாரியம் சோதித்து அதன் முடிவுகளின் அடிப்படையில் புதிய கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்முதல் தளமான GeBizல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5ஆம் தேதி அந்த விவரங்கள் அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டன.
“மேம்படுத்தப்பட்ட செயல்பாடு, பயனர் அனுபவம் மற்றும் செயல்பாட்டுத் திறன்” ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு தயாரிக்கப்படும் மேம்பட்ட கருவிகளாக அவை இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதிய கருவிகளை நிறுவுவதற்கான ஏலக்குத்தகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31ஆம் தேதி இறுதி நாள்.
முன்மாதிரி சுயசோதனைக் கருவிகள் ஏற்கெனவே நிறுவப்பட்டு, 2023 நவம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை சோதித்துப் பார்க்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக 700க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதாக வாரியம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏறத்தாழ 230 மோட்டார் சைக்கிள்கள் புகை வெளியேற்ற வரம்புகளை மீறியதால் அவற்றின் ஓட்டுநர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

