கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு விலையேற்றம் ஒரு சவால்

எரிசக்தி விலை உயர்வு, விநியோக இடையூறு

கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு விலையேற்றம் ஒரு சவால்

2 mins read
77055a95-df15-4bf3-bd32-cce6f5f12db6
சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம், கட்டுமானப் பொருள்களின் விலைகள் ஐந்து முதல் 15 விழுக்காடுவரை அல்லது அதற்கும் மேல் கூடியிருப்பதாகக் கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அதிகரித்துவரும் எரிசக்தி விலைகளும் சரக்குப் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறுகளும் சிங்கப்பூரின் கட்டுமானத் துறையின் செலவுகளைக் கூட்டியுள்ளன.

மனிதவளப் பற்றாக்குறையாலும் அதிகமான குத்தகைத் திட்டங்களாலும் ஏற்கெனவே அத்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் வலுத்துவருகிறது. உலக அளவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், எரிசக்தி விலைகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன. கட்டுமானப் பொருள்களுக்கான செலவுகளும் உயர்ந்துவருகின்றன.   

சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம், கட்டுமானப் பொருள்களின் விலைகள் ஐந்து முதல் 15 விழுக்காடுவரை அல்லது அதற்கும் மேல் கூடியிருப்பதாகக் குறிப்பிட்டது.

டீசல் விலை, 155 விழுக்காடு கூடுதலாகி, லிட்டருக்கு 90 காசிலிருந்து இரண்டு வெள்ளி 30 காசுக்கு அதிகரித்துள்ளது.  

கான்கிரீட், சிமென்ட், அலுமினியம், செம்பு போன்ற பொருள்களுக்கும் சேவை, போக்குவரத்து முதலியவற்றுக்குமான மறைமுகச் செலவுகளும் உயர்ந்துள்ளன. சில போக்குவரத்து, இயந்திரத் தளவாட நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளி வரை இழப்பைச் சந்திக்க நேரக்கூடும் என்று கவலையுடன் இருப்பதாகக் குத்தகையாளர் சங்கம் சொன்னது.  

மத்திய கிழக்குப் பூசலால் காப்புறுதிக் கட்டணங்கள், சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள், கப்பல்களில் எரிசக்தி நிரப்புவதற்கான கட்டணங்கள் முதலியவை அதிகரித்துள்ளன; ஹோர்முஸ் நீரிணையிலும் செங்கடலிலும் கப்பல் போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது; அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தளவாடங்கள் சென்றுவருவதில் சிக்கல்கள் நிலவுகின்றன என்று லைன்சைட் கட்டுமான ஆலோசனை நிறுவனத்தின் தென்கிழக்காசியாவுக்கான வட்டார இயக்குநர் ஸ்காட் ஹேலிடே தெரிவித்தார்.

“இத்தகைய இடையூறுகள் உலக அளவில் கப்பல் போக்குவரத்தைப் பாதிப்பதோடு எரிசக்திச் சந்தையில் காப்புறுதிக் கட்டணங்களையும் உயர்த்துகின்றன,” என்றார் அவர்.

சிங்கப்பூர் போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் கட்டுமானச் சந்தைகளில் எஃகு விலைகள் அதிகரிக்க அவை காரணமாக அமையக்கூடும் என்றும் திரு ஹேலிடே குறிப்பிட்டார். அதனால் கட்டுமானத் திட்டங்கள் தாமதமடையக்கூடும் என்றும் பலவற்றுக்கு உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

ஹோர்முஸ் நீரிணையின் முடக்கத்தால் எண்ணெய் விலை தொடர்ந்து ஏறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கட்டுமானத் துறைஎரிசக்திவிலைசரக்குஇடையூறுகள்