தீவிரவாதப் போக்கில் ‘ஏஐ’யின் தாக்கம்

தீவிரவாதப் போக்கில் ‘ஏஐ’யின் தாக்கம்

2 mins read
சமய மறுவாழ்வுக் குழு ஆராய்வதாக அமைச்சர் சண்முகம் தகவல்
dd6b0446-8f61-4764-a3b5-2a9dca76463c
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்தரக் கூட்டத்தில் கலந்துகொண்டோரைச் சந்திக்கிறார். அவர்களில் சமய ஆசிரியரும் தொண்டூழிய ஆலோசகருமான திரு யூசுப் அலியும் (அமர்ந்திருப்பவர்) ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தொழில்நுட்பம் தீவிரவாதப் போக்கைத் துரிதப்படுத்திவரும் வேளையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்னிலக்கத் தளங்கள் ஆகியவை எவ்வாறு தனிநபர்களைப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல்களை சமய மறுவாழ்வுக் குழு வளர்த்துவருகிறது.

அந்தத் தொண்டூழிய அமைப்பு இணையவழி நடத்தைக்கும் நிஜ உலகச் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

ஷங்ரிலா ராசா செந்தோசாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெற்ற சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்தரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சமய மறுவாழ்வுக் குழு தொடங்கப்பட்டதிலிருந்து, மிரட்டல்களின் தன்மை கணிசமாக மாறியுள்ளதாகத் திரு சண்முகம் கூறினார்.

சமய மறுவாழ்வுக் குழு தொடங்கிய காலத்தில், போராளித்துவ அமைப்பான அல்-கயிடாவின் தென்கிழக்காசியப் பிரிவான 'ஜெமா இஸ்லாமியா'வைச் சேர்ந்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலேயே அதன் கவனம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“மின்னிலக்கத் தளங்கள் இருவழித் தொடர்பை அதிகரித்துள்ளன. அங்குள்ள தன்னியக்க வழிமுறைகள் (algorithms) நமக்குத் தேவையானதை ஊட்டி விடுகின்றன. நாம் சில குறிப்பிட்ட விஷயங்களைப் பார்த்தால், இந்த தன்னியக்க வழிமுறைகள் அதேபோன்ற உள்ளடக்கங்களை நமக்கு மேலும் மேலும் தொடர்ந்து வழங்கும்,” என்று திரு சண்முகம் கூறினார்.

“தீவிரவாத உள்ளடக்கம் இப்போது மிகவும் துல்லிய இலக்குகளைக் கொண்டுள்ளன. அது தனிநபர்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டு, ஈர்க்கக்கூடியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.

“இதன் காரணமாகவே, தீவிரவாதப் போக்குக்கு மாறும் வேகம் முன்பைவிட இப்போது வெகுவாக அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஒரு நபர் தீவிரவாதப் போக்குக்கு மாறுவதற்கான சராசரி காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாகக் குறைந்துள்ளது என்று உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் தெரிவித்தார். ஒருசிலர் சில நாள்களிலேயே தூண்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

“இப்போது செயற்கை நுண்ணறிவால், இத்தகைய ஆபத்துகள் மேலும் அதிகரிக்கின்றன,” என்றார் அவர்.

திரு சண்முகம் அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்களைச் சுட்டினார். 2024ஆம் ஆண்டில் 17 வயது இளையர் தடுத்துவைக்கப்பட்ட சம்பவமும் அவற்றில் அடங்கும்.

தெம்பனிசில் முஸ்லிம் அல்லாதவர்களைக் கத்தியால் தாக்க அவர் திட்டமிட்டிருந்தார். அவருக்கு ஈராண்டுகள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், பல்வேறு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்த ஓர் இளையர், அதற்காக முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் மூலம் சொந்தமாகத் துப்பாக்கிகளைத் தயாரிக்கப் பரிசீலித்திருந்தார்.

அவரைக் கடந்த 2025ஆம் ஆண்டில் தடுத்துவைக்க உத்தரவிடப்பட்டது.

மாறிவரும் தொழில்நுட்பத்தைத் தவிர, உலகமும் மாறிவிட்டதாகத் திரு சண்முகம் கூறினார். மத்திய கிழக்கு, தற்போது நிலவும் போர்ச் சூழல், பிளவுகள் ஆகியவற்றால் மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.

தீவிரவாதிகள் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற அத்தகைய போர்ச் சூழல்களைப் பயன்படுத்துவதாகவும் திரு சண்முகம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்