சட்டவிரோதமாக மாத்திரைகள் விற்பனை; கேலாங்வாசிகள் கவலை

சட்டவிரோதமாக மாத்திரைகள் விற்பனை; கேலாங்வாசிகள் கவலை

2 mins read
2eda4fb3-de96-4804-bf95-e8851fc4e230
கடந்த மே மாதம் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் கேலாங்கில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர். அதில் 57,000க்கும் அதிகமான மாத்திரை அட்டைகள் பிடிபட்டன. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்
Google News Preferred Icon

கேலாங் வட்டாரத்தில் சாலைகள் அருகே சட்டவிரோதமாக மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் மீண்டும் அவர்களது வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சட்டவிரோத மாத்திரைகள் விற்பனையைத் தடுக்க சுகாதார அறிவியல் ஆணையம் பலமுறை அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கைகளை குறைத்துவிட்டால் மறுகண்மே சட்டவிரோதமாக மாத்திரைகளை விற்க தொடங்கிவிடுகிறார்கள் என்று கேலாங் வாசிகள் கூறுகின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகள் அருகேயும் மாத்திரைகள் விற்கப்படுவதாக வட்டாரவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் கேலாங்கில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் 165 லிட்டர் இருமல் மருந்து, 57,000க்கும் அதிகமான மாத்திரை அட்டைகள் பிடிபட்டன. அவற்றின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 130,000 வெள்ளி.

அந்த வீடு சட்டவிரோதமாக மாத்திரை தயாரிக்கும் இடமாகவும் சேகரிப்பு இடமாகவும் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது

இந்நிலையில் லோராங் 21A கேலாங் பகுதியில் உள்ள ஒரு காப்பி கடை அருகே 2 ஆடவர்கள் சட்டவிரோதமாக மாத்திரைகளை விற்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு தகவல் வந்தது.

கடந்த மாதம் 5ஆம் தேதி அந்த ஆடவர்கள் சிம்ஸ் பிளேஸ் குடியிருப்பு பேட்டை அருகே சட்டவிரோதமாக மாத்திரைகளை விற்பனை செய்தனர்.

ஒரு வயதான ஆடவர் ரகசியமாக மரத்திற்கு அருகில் சைக்கிள் ஒன்றில் மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை பார்க்க முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அந்த வயதான ஆடவர் பல மாதங்களாக இந்தக் குற்றச்செயலை செய்து வருவதாக அவ்வட்டாரத்தில் வசிக்கும் 55 வயது மிரியம் லீ தெரிவித்தார்.

அந்த ஆடவரிடம் இருந்து சில குழந்தைகளும் மாத்திரைகள் வாங்குவதாக 64 வயது சியு வருத்தம் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மாத்திரைகளை விற்பனை செய்த ஆடவரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நோட்டமிட்டதாகவும் குறிப்பிட்டது. 20க்கும் 50க்கும் இடைபட்ட வயதுப் பிரிவினர் அந்த ஆடவரிடம் மாத்திரைகள் வாங்கியதாக அது கூறியது.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபரை சுகாதார அறிவியல் ஆணையம் விசாரித்து வருகிறது.

சட்டவிரோதமாக விற்கப்படும் மாத்திரைகள் ஒழுங்குமுறை இல்லாமல் தயாரிக்கப்படுபவை. அவற்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சட்ட விரோதம்காவல்துறைகைது