நிலப் போக்குவரத்து ஆணையம், கடந்த மூன்று வாரத்தில் சட்ட விரோதமாகத் தனியார் வாடகை கார் சேவைகளை வழங்கிய 11 ஓட்டுநர்களைப் பிடித்துள்ளது.
எல்லை தாண்டி மலேசியாவுக்குச் சேவை வழங்கிய அவர்கள், சிங்கப்பூரில் சிக்கினர். நிலவழிச் சோதனைச்சாவடி, ஃபெர்ன்வேல் ரோடு, மண்டாய் ரோடு முதலிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அவர்கள் பிடிபட்டதாக ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.
அவர்களின் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
தேசியத் தனியார் வாடகை வாகனச் சங்கமும் தேசிய டாக்சி சங்கமும் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
பயணிகளின் பாதுகாப்பையும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் நலன்களையும் கருத்தில்கொண்டு இவ்வாண்டு (2025) ஜூலையிலிருந்து 2,700க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
குறிப்பிட்ட அந்தக் காலத்தில் 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“எல்லை தாண்டிய வாடகைச் சேவைகளை வழங்கும் கம்ஃபர்ட்டெல்குரோ, ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர், டிரான்ஸ்-கேப், பிரைம் போன்ற உரிமம் பெற்ற டாக்சிகளை நீங்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்து கொள்ளலாம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பான் சான் ஸ்திரீட்டிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் பயணிகளை ஜோகூருக்கு ஏற்றிச்செல்லும் சேவைகளை அவை வழங்குகின்றன. பின்னர் ஜோகூரின் லார்க்கின் சென்ட்ரல் முனையத்தில் பயணிகள் இறக்கிவிடப்படுவர் என்றார் திருவாட்டி சுன்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத வாடகை கார் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களுக்கு S$3,000 வரை அபராதமோ ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

