வீவக கட்டட உச்சியில் பதுங்கி இருந்த சட்டவிரோதக் குடியேறி கைது

வீவக கட்டட உச்சியில் பதுங்கி இருந்த சட்டவிரோதக் குடியேறி கைது

1 mins read
8bf646fe-03e2-45bd-ba3a-2ceee4277e51
சாதாரண உடையணிந்த அதிகாரிகள் பல மணிநேரம் கண்காணித்த பின்னர் ஆடவரைக் கைது செய்தனர். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

உட்லண்ட்சில் உள்ள வீவக கட்டடம் ஒன்றின் உச்சியில் உறங்கிக்கொண்டிருந்தவர், சட்டவிரோதக் குடியேறி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த அந்த 27 வயது ஆடவரின் சமூக வருகை விசா 2025 ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் அவர் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகத் தெரிகிறது.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) அதிகாலை 5 மணியளவில், உட்லண்ட்ஸ் டிரைவ் 16ல் உள்ள புளோக் 574ன் பலமாடி கார் நிறுத்தக் கட்டடத்தின் பூங்காவில் உறங்கிக்கொண்டிருந்த ஆடவரை சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அப்போது அவருடன் இருந்த மற்றொரு வெளிநாட்டு ஆடவரையும் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். சட்டபூர்வ வேலை அனுமதி அட்டையைக் காண்பித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, அந்த இரு ஆடவர்களையும் பல மணி நேரம் கண்காணித்த அதிகாரிகள், தப்பிச்செல்லக்கூடிய வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டனர். இந்தக் கைது நடவடிக்கையில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு 538 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 484 பேர் விசா முடிந்த பின்னரும் இங்கு அனுமதியின்றி தங்கி இருந்தவர்கள் என்று ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்