‘ஐஜூஸ்’ பழச்சாறு தானியங்கி இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழாயை நாவினால் தடவி எச்சில் படுத்திவிட்டு, அதை மீண்டும் அதே இடத்தில் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பதின்ம வயது ஆடவர், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது வழக்கு ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன், 18, என்ற தனியார்பள்ளி மாணவர் பள்ளி தொடர்பான பயணத்திற்காக மே மாதத்தில் பிலிப்பீன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
‘காளிதாஸ் லா கார்ப்பரேஷன்’ சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த தற்காப்பு வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா, கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த வெளிநாட்டுப் பயணம், மாணவர் பட்டப்படிப்பை முடிப்பதற்கான ஒரு கட்டாயத் தேவை என்று கூறியிருந்தார்.
ஒன்-நார்த் பகுதியில் அமைந்துள்ள ’இஎஸ்எஸ்இசி’ (ESSEC) தனியார் வர்த்தகப் பள்ளியின் மாணவரான மெக்ஸ்மிலன், மே 2 முதல் மே 25 வரை சிங்கப்பூரில் இருக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அவர் மீது குறும்புத்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தாம்சன் ரோட்டில் இருக்கும் கோல்டுஹில் சென்டரில் கடந்த மார்ச் 12ஆம் தேதி, அக்குற்றத்தைச் செய்ததாக மெக்ஸ்மிலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
புதிதாக உடனுக்குடன் பிழிந்தெடுத்த ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் தானியங்கி இயந்திரங்களுக்குப் பெயர்பெற்ற ‘ஐஜூஸ்’ நிறுவனம், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த இயந்திரத்தில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்ற வேண்டியதாயிற்று என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
தொடர்புடைய செய்திகள்
மெக்ஸ்மிலன் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்கான தண்டனையாக மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

