துணைப் பிரதமர்: ஊழல் விவகாரம் சிங்கப்பூருக்கு ஒரு ‘பின்னடைவு’

துணைப் பிரதமர்: ஊழல் விவகாரம் சிங்கப்பூருக்கு ஒரு ‘பின்னடைவு’

2 mins read
c23ac536-def3-4cd6-baf4-259404cc949f
இழந்த நம்பிக்கையை மக்களிடமிருந்து மீண்டும் பெறுவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் கடுமையாக உழைக்கும் என்று ‘பிபிசி’க்கு அளித்த பேட்டியில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார். - படம்: பிபிசி நியூஸ்
Google News Preferred Icon

அண்மையில் அரசியல் ரீதியாக எழுந்த ஊழல் விவகாரத்தை அடுத்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் இருமடங்கு கடுமையாக உழைக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிபிசி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஊழல் விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு ஆகிய விவகாரங்களால் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சிக்குச் சேதாரம் ஏற்பட்டிருப்பதை திரு வோங் ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் பிபிசியின் ‘நியூஸ்டே’ நிகழ்ச்சியில் அவர், “ஆளும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இந்த விவகாரங்கள் ஒரு பின்னடைவே,” என்றார்.

இருப்பினும், அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை அல்லது பொறுப்பேற்கவில்லை என்ற விமர்சனங்களை அவர் மறுத்தார்.

“சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் வெளிப்படையாக இருந்திருக்கிறோம். விவகாரங்கள் தொடர்பில் முழுமையாக விசாரித்து மக்களுக்கு பொறுப்பான அரசாங்கமாக இருப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார் திரு வோங்.

போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், கோடீஸ்வரரான ஹோட்டல் நிர்வாகி ஓங் பெங் செங் இருவரும் ஊழல் விசாரணையில் சிக்கியிருப்பதற்கு இடையே இதுகுறித்த தகவல்களைத் தெரியப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மக்கள் அதிருப்தியில் இருப்பதைத் தாம் அறிந்துள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஈஸ்வரன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் தொடர்பில் விசாரணை நடத்திய அதிகாரிகள், செயல்பாட்டு அம்சங்களைக் கருதி, கைது பற்றிய தகவலை வெளியிட மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ள முடிவெடுத்ததாக திரு வோங் தெரிவித்தார்.

அத்துடன் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) தனித்துச் செயல்படும் ஒரு தரப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சிபிஐபியின் பணியில் சிங்கப்பூரர்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று நம்புகிறேன். எங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது இதுவரை ஊழலற்ற அரசாங்கமாக இருந்து வருகிறோம். ஊழலை நாங்கள் ஒரு பொழுதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்,” என்றார் அவர்.

கடந்த ஜூன் மாதத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் சொத்துச் சந்தையைத் தவறாகக் கையாண்டதாகக் கூறப்பட்டு பின்னர் சிபிஐபியின் மறுஆய்வில் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், அண்மைய நிகழ்வுகளால் 1959ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்துவரும் மக்கள் செயல் கட்சிக்கான ஆதரவு குறையக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

முறைதவறி நடக்கும் நிகழ்வுகளால் ஓர் அரசாங்கத்தின் நற்பெயர் கெடலாம். இது குறித்து நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங், “நாங்கள் முறையான நடத்தை தொடர்பில் உயர் தரங்களை வகுத்துள்ளோம்,” என்றார்.

“நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கும் வாய்ப்பு எனக்கு வந்தால், பதவிக்கு நான் வருவதை மட்டும் அது குறிக்காது. சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை நான் அவர்களிடமிருந்து சம்பாதிக்க வேண்டியிருக்கும். நாட்டை முன்னெடுத்துச் செல்ல, அவர்களின் நம்பிக்கையையும் அதிகாரத்தையும் நான் வெல்ல வேண்டும்,” என்றார் துணைப் பிரதமர் வோங். 

குறிப்புச் சொற்கள்