சீனப் புத்தாண்டு வாரத்தில் கொட்டித் தீர்த்த மழை

சீனப் புத்தாண்டு வாரத்தில் கொட்டித் தீர்த்த மழை

2 mins read
914a9b67-ae14-4f39-a642-a2e090b65754
சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஒரு சில சாலைகளைத் தவிர்க்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டின்போது மழை கொட்டித் தீர்த்ததாகச் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. சீனப் புத்தாண்டு இவ்வாண்டு பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில் வந்தது.

ஒட்டுமொத்த பிப்ரவரி மாதத்திலும் வழக்கமாகப் பெய்யும் சராசரி மழையைவிட சீனப் புத்தாண்டு வாரத்தில் அதிக அளவில் மழை பெய்தது. பிப்ரவரி 19ஆம் தேதி, இவ்வாண்டுக்கான ஆக அதிக அளவிலான கனத்த மழை பெய்ததாகப் பதிவானது.

பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 166.7 மில்லிமீட்டர் மழை பெய்தது. பிப்ரவரி மாதத்தில் சராசரியாக 132.11 மில்லிமீட்டர் மழைதான் பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள மார்கரெட் டிரைவில் பிப்ரவரி 19ஆம் தேதி 148.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதே நாளில் ஆகக் குறைவான வெப்பநிலையும் பதிவானது. பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 9.12 மணியளவில் வெப்பநிலை 20.3 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது.

கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சுவா சூ காங் சவுத் வட்டாரத்தில் பதிவான வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

சீனப் புத்தாண்டு வாரத்தின்போது பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளங்களும் ஏற்பட்டன. பிப்ரவரி 18ஆம் தேதி சிங்கப்பூரில் கொட்டிய கனத்த மழையைத் தொடர்ந்து ஜூரோங் டவுன் ஹால் சாலை வெள்ளக்காடானது.

பிப்ரவரி 19ஆம் தேதி பிற்பகல் வாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களையும் புக்கிட் தீமா சாலையையும் தவிர்க்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிப்ரவரியில் எஞ்சியுள்ள நாள்களில் வானிலை சற்று வறட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் சொன்னது. பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யக்கூடும்.

குறிப்புச் சொற்கள்