சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகைமூட்டம் நீடிப்பதால் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொது மருத்துவர்கள் பலர் கூறியிருக்கின்றனர்.
மத்திய, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறி மருந்தகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
சேனல்நியூஸ்ஏஷியா இத்தகவலை வெளியிட்டிருந்தது.
பியூட்டி வேர்ல்ட் பிளாசா, பிராடல், செங்காங் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்ட கிங்ஸ்வே மருந்தகத்தின் மருத்துவரான டாக்டர் ஜோயல் லிம், புகைமூட்டம் தொடர்பில் அண்மையில் நோயாளிகளின் எண்ணிக்கை 10 முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதை கவனிக்க முடிவதாகக் கூறியுள்ளார்.
“காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இந்த அதிகரிப்பு பொதுவாக நிகழ்கிறது,” என்று அவர் கூறினார்.
புகைமூட்டம் பெரும்பாலும் தொண்டை எரிச்சல், இருமல் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த உயர்வுக்கு வட்டாரத்திலும் உள்ளூரிலும் நிலவும் வறண்ட பருவநிலையே காரணம்.
சென்ற திங்கட்கிழமை (பிப்ரவரி 9), கிழக்கு ஜோகூரில் மூண்ட தீயிலிருந்து சிங்கப்பூரை நோக்கி வீசும் காற்றால் புகைமூட்டம் ஏற்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேர காற்று மாசு தரக் குறியீடு 50 முதல் 62 வரை இருந்தது. இது, மிதமான அளவில் காற்று மாசடைந்துள்ளதைக் காட்டுகிறது.
வறண்ட பருவநிலை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தொடரும் என எதிர்பார்ப்பதாக வாரியம் குறிப்பிட்டது.

