பிரதமர் வோங்: ஈரான் போர் தொடர்பில் உத்தேசத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

பிரதமர் வோங்: ஈரான் போர் தொடர்பில் உத்தேசத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

2 mins read
ba5ac157-b62f-410d-97c3-810a86cd7659
(இடது) பிரதமர் லாரன்ஸ் வோங் சீனாவில் ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயைச் சந்தித்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஹாங்காங்: ஈரான் போர் தொடர்பில் உத்தேசத் திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது தெரிவிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும்.

சிங்கப்பூரின் எரிசக்தித் துறை, விநியோகத் தொடர்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படும் என்றார் அவர்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் பெரும்பாலோரின் கவலை விலைகள்மீது ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து இருக்கிறது என்றார் பிரதமர் வோங். போர் நிலவரம் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்தாலோ மோசமடைந்தாலோ நிலைமை என்னவாகும் என்ற கவலைதான் இப்போதைக்கு மேலோங்கியிருக்கிறது என்றார் அவர்.

சீனப் பயணத்தின் இறுதியில் சனிக்கிழமை (மார்ச் 28) ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் ஊடகங்களிடம் அவர் பேசினார்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதை அடுத்து ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது. அப்பகுதியில் மோதல் நீடிப்பதால் உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கும் ஈரான் தடைசெய்துள்ளது, முக்கியமாக எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளது.

சீனாவுடன் இணைய புதிய வாய்ப்புகளைத் தரும் ஹைனான், ஹாங்காங்

இதற்கிடையே, சீனாவுடன் இணைய ஹைனானும் ஹாங்காங்கும் சிங்கப்பூருக்குப் புதிய வழிகளை வழங்குகின்றன என்று பிரதமர் வோங் கூறியுள்ளார்.

சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் வோங், பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை சீனாவில் இருந்த அவர், வருடாந்தர பொஆவ் மாநாட்டில் கலந்துகொண்டு ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயைச் சந்தித்துப் பேசினார்.

சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தலைசிறந்த இருதரப்பு உறவுக்கு இடையே திரு லீயுடன் நல்ல கலந்துரையாடல் இடம்பெற்றதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

அந்தக் கலந்துரையாடல் மூலம் சீனாவுடன் இணைவதற்குப் பல உத்தேச வழிகள் கிடைத்ததாகக் கூறிய திரு வோங், ஹாங்காங்கைத் தவிர இப்போது ஹைனான் தடையற்ற வர்த்தகத் துறைமுகமும் கைவசம் உள்ளது என்றார். அது புதிய வாய்ப்புகளைத் தருவதாகவும் அவர் கூறினார்.

“சீனாவின் பல்வேறு மாநிலங்களில் நமக்குத் திட்டங்கள் உள்ளன. அவை அனைத்தும் சீனாவின் மேம்பாட்டில் பங்கெடுப்பதற்கும் சீனாவின் வெற்றிக்குப் பங்களிப்பதற்கும் பல வழிகளைத் தருகின்றன,” என்று பிரதமர் வோங் பகிர்ந்துகொண்டார்.

சீனாவின் நீண்டகாலத் திட்டங்களில் நம்பிக்கை உள்ளதால் சீனாவின் நீண்டகால முதலீட்டாளராகச் சிங்கப்பூர் தொடர்ந்து இருக்கும் என்றார் அவர்.

ஹைனானில் இருந்த பிரதமர் வோங், தடையற்ற வர்த்தகத் துறைமுகத்தைச் சிங்கப்பூர் நீண்டகாலமாக ஆதரித்துவருகிறது என்றும் அதன் வெற்றிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்சீனாஹாங்காங்பயணம்