பொது மருந்தகங்களுக்கான அரசாங்க நிதி உதவி 2025ல் $350 மில்லியனாக உயர்வு

பொது மருந்தகங்களுக்கான அரசாங்க நிதி உதவி 2025ல் $350 மில்லியனாக உயர்வு

2 mins read
531a260b-8104-40b3-973c-2100c2cd411f
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்), சிங்கப்பூர் முதன்மைப் பராமரிப்பு மாநாடு 2026ஐ, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ள அகடமியாவில் வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கிவைத்து உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சுகாதார அமைச்சின் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின் கீழ், நோய்த் தடுப்பு பராமரிப்பு, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பொதுநல மருந்தகங்களின் (GP) பங்கை வலுப்படுத்த அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் கணிசமாக உயர்த்தியுள்ளது.

பொதுநல மருந்தகங்களுக்கு 2022ல் $230 மில்லியனாக இருந்த நிதி ஆதரவு 2025ல் ஏறக்குறைய $350 மில்லியனாக அதிகரித்தது.

இது, ஒவ்வொரு மருந்தகமும் சராசரியாக $140,000க்கும் அதிகமான நிதியைப் பெறுவதை உறுதிசெய்கிறது.

சிங்கப்பூர் முதன்மைப் பராமரிப்பு மாநாட்டில் வெள்ளிக்கிழமை (மே 15) உரையாற்றிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

மருந்து விற்பனை லாபம் குறையும் சூழலில், அரசாங்கம் வழங்கும் பொதுமக்களுக்கான சேவைக் கட்டணம் மருந்தகங்களின் வருவாயை ஈடுகட்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், தீவிர நோய்ப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு சிகிச்சைகளை வழங்க மருந்தகங்களுக்குப் புதிய திறன்களும் செயல்முறைகளும் தேவை என்றார் அவர்.

இதில், ‘டீம்லட்’ (Teamlet) எனும் குழுப் பராமரிப்பு முறையை மருந்தகங்கள் பின்பற்ற வேண்டும். இதில் மருத்துவர்கள், தாதியர், பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றுவர்.

பலதுறை மருந்தகங்களில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்படும் இம்முறை, மருத்துவமனை சேர்க்கையைக் குறைப்பதோடு நோயாளிகளின் நலனையும் மேம்படுத்துகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

‘எக்ஸ்ரே’, ‘அல்ட்ராசவுண்ட்’, விழித்திரையைப் படமெடுக்கும் கேமரா போன்ற நவீனக் கருவிகளைப் பொது மருந்தகங்கள் பயன்படுத்தும் வசதி மேலும் விரிவாக்கப்படும்.

குடியிருப்புப் பேட்டைகளில் புதிய மருந்தகங்களுக்கான ஏல முறையை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து அரசாங்கம் மாற்றியுள்ளது.

புதிய நடைமுறையில் ஏலத் தொகையைவிட தரமான சிகிச்சைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். 2025ல் ஒரு மருந்தகத்தின் ஏலத்தில் நிலவிய கடுமையான விலைப் போட்டி, புதிய மாற்றத்திற்கு வித்திட்டது.

மிதமான அறிவாற்றல் குறைபாடுள்ள முதியவர்களுக்காகச் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ‘மூளை உடற்பயிற்சிக் கூடம்’ (Brain Health Playground) எனும் திட்டத்தை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமம் மாநாட்டில் அறிவித்தது.

சிங்கப்பூர் முதன்மைப் பராமரிப்பு மாநாடு 2026ல் பங்கேற்றவர்களுடன் உரையாடும் அமைச்சர் ஓங்.
சிங்கப்பூர் முதன்மைப் பராமரிப்பு மாநாடு 2026ல் பங்கேற்றவர்களுடன் உரையாடும் அமைச்சர் ஓங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் 60 முதியவர்களுடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், எட்டு வாரங்களில் 16 அமர்வுகளைக் கொண்டது. அவர்களின் நினைவாற்றல், உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் அத்திட்டம், முதியோர் மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சிங்கப்பூரின் முதன்மை சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள மற்றொரு மாற்றம், தடுப்புப் பராமரிப்பிற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புத் துறையாக குடும்ப மருத்துவத்தை அங்கீகரிப்பதாகும். 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல், 220க்கும் மேற்பட்ட குடும்ப மருத்துவ நிபுணர்கள், சிறப்பு நிபுணர்கள் அங்கீகார வாரியத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்று திரு ஓங் கூறினார்.

சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமப் பலதுறை மருந்தகங்கள், தேசிய பல்கலைக்கழகப் பலதுறை மருந்தகங்கள், சிங்கப்பூர் குடும்ப மருத்துவர்கள் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய சிங்கப்பூரின் முதன்மைப் பராமரிப்பு மாநாடு 2026ல் 600க்கும் மேற்பட்ட குடும்ப மருத்துவர்களும் பொது மருத்துவர்கள் பங்கேற்றனர்.

வளர்ந்துவரும் சுகாதாரத் தேவைகளுக்கேற்ப முதன்மை நிலையங்களை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்