சிங்கப்பூர் வங்கிப் பங்குகளை வாங்க பொன்னான வாய்ப்பு

சிங்கப்பூர் வங்கிப் பங்குகளை வாங்க பொன்னான வாய்ப்பு

2 mins read
735862ba-7b5e-4dc1-94af-215934ed22f6
புதிய விதிகளின்படி, 10 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை விலை கொண்ட பங்குகளின் குறைந்தபட்ச வணிக அளவு 100 அலகுகளிலிருந்து 10 அலகுகளாகக் குறைக்கப்படும். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முன்னணி உள்ளூர் வங்கிகளின் பங்குகளை வாங்க நினைப்பவர்கள் இனி பெருந்தொகையை முதலீடு செய்யத் தேவையில்லை.

முதலீட்டாளர்கள் எளிதாகப் பங்குகளை வாங்கும் வகையில், ‘போர்டு லாட்’ எனப்படும் நிலையான, குறைந்தபட்ச பங்குகளின் குறைந்தபட்ச வணிக அளவு அக்டோபர் 5ஆம் தேதிமுதல் குறைக்கப்படும் எனச் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை வியாழக்கிழமை (ஜூலை 2) அறிவித்துள்ளது.

புதிய விதிகளின்படி, 10 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை விலை கொண்ட பங்குகளின் குறைந்தபட்ச வணிக அளவு 100 அலகுகளில் (Units) இருந்து 10 அலகுகளாகக் குறைக்கப்படும். 100 வெள்ளிக்கு மேல் விலை கொண்ட பங்குகளின் அளவு ஓர் அலகாகக் குறைக்கப்படும்.

இந்த அதிரடி மாற்றம் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய மூன்று முன்னணி வங்கிகள், கெப்பல், வென்ச்சர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 11 முக்கியப் பங்குகளுக்குப் பொருந்தும்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் பங்குச் சந்தை வணிகத்தில் அந்த 11 பங்குகளும் 35 விழுக்காட்டுப் பங்களிப்பை ஆற்றியுள்ளன. இதன்மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்த செலவில் பங்குகளை வாங்க முடியும்.

மேலும், ஜூலை 15 முதல் கூட்டுத் தொகுப்புக் கணக்குகளில் (broker custody accounts) வாடிக்கையாளர்கள் சார்பாகப் பங்குகளை வைத்திருக்க சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட நிதி முகவர்களுக்கு (depository agents) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலகளாவிய நடைமுறை அனைத்துலக முகவர்களைக் கவரும் என சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை நம்புகிறது.

எனினும், சில்லறை முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, முகவர்களுக்கான குறைந்தபட்ச சேவைத் தரநிலைகளை வலுப்படுத்தவும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பங்குச்சந்தைவங்கிடிபிஎஸ்ஓசிபிசியுஓபிகெப்பல்