சாலை, ரயில் போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், கட்டுமானம் என பெருமளவிலான தொழில் துறைகள் டீசல் போன்ற எரிவாயுவைச் சார்ந்தே இயங்குகின்றன.
எனவே தற்போது நிலவும் அதன் தட்டுப்பாடு உணவு உற்பத்தி, அதன் விநியோகம், விவசாய மூலப்பொருள்கள் போன்ற பலவற்றைப் பாதித்துள்ளன.
பெட்ரோலின் மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புத் துறையில் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
“பெருந்தொற்று காலத்தைவிட தற்போதுள்ள நிலைமை மோசமாகவுள்ளது. எரிபொருள் அனைத்து துறைகளையும் பாதிக்கும். மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாட்டின் முழுமையான தாக்கத்தை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை,” என்று சிங்கப்பூர் உணவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ரேமண்ட் டான் தெரிவித்தார்.
உணவுப் பொருள்களின் விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் இருந்த மூலப்பொருள்களைக் கொண்டு உணவைத் தயாரித்து, பதப்படுத்தி, பிறகு அவற்றை விற்பனைக்கு வைக்கின்றனர். ஆனால் இருப்புகள் தீர்ந்ததும் புதிய மூலப்பொருள்களை மீண்டும் வாங்கும்போதுதான் முழு பாதிப்பும் உணரப்படும் எனவும் அவர் விளக்கினார்.
இந்நிலையில் இயற்கை எரிவாயுவை அதிகம் சார்ந்த விவசாய உரங்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. மொத்த உலக உரங்களின் வர்த்தகத்தில் 30 விழுக்காடு மத்திய கிழக்கில் இருந்தே வரவழைக்கப்படுகிறது.
விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் உர வகைகளின் விலை கடந்த மாதம் மட்டும் 35 விழுக்காடு ஏற்றம் கண்டது.
அதோடு, சீனாவும் ரஷ்யாவும் உலக உரங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா உட்பட ஆசிய நாடுகள் அத்தடையால் பாதிப்படைந்துள்ளன என ஏஎன்ஸி நிறுவனம் நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

