தங்களது குடியிருப்புப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, பயனுள்ள ஒரு சூழலை உருவாக்கும் நோக்கில் சமூக நூலகத் திட்டத்தை நிறுவிய யாஸ்மின் பேகம் - முகமது அஸ்ஹார் இணையருக்கு ‘வளர்ந்து வரும் சமூகங்களுக்கான நிதி உதவி’ (Thriving Communities Fund) கிடைத்துள்ளது.
பொறுப்புணர்வையும் சமூகத் திறன்களையும் வளர்ப்பதுடன், பல்வேறு தலைமுறையினர், பல்லின சமூகத்தினரிடையேயான தொடர்புகளை மேம்படுத்தி, கம்பத்து உணர்வைக் கொண்டுவரும் நோக்கில் இதனை நிறுவியதாகச் சொன்னார் தனியார் பயிற்றுநரான அஸ்ஹார்.
சில நூல்கள், பொம்மைகளுடன் தொடங்கிய அவ்விடம், தற்போது அனைவரையும் ஈர்க்கும் இடமாக மாறியுள்ளதில் இணையர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஈசூன் ரிங் ரோடு, புளோக் 137இன் தரைத்தளத்தில் உள்ள காலி இடத்தைப் பயன்படுத்தி அவர்கள் தொடங்கிய இத்திட்டம் தற்போது மேம்பாடு கண்டுள்ளது.
‘வளர்ந்து வரும் சமூகங்களுக்கான’ நிதி உதவி
சமூகக் குளிர்பதனப் பெட்டி முதல் சமூக நூலகம் வரை, சொங் பாங்கில் கம்பத்து உணர்வை வலுப்படுத்த $665,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு, உள்துறை அமைச்சரும் சொங் பாங்கின் நாடாளுமன்ற உறுப்பினருமான கா. சண்முகம், பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த உதவித் திட்டத்தை அதிகாரத்துவமாகத் தொடங்கி வைத்தார்.
சமூகத்தால் இயக்கப்படும் திட்டங்கள் நீடித்த நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அமைச்சர், “சொங் பாங் குடியிருப்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும், சமூக உணர்வை வலுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
நீ சூன் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான டாக்டர் சையத் ஹருன் அல்ஹப்சி, “இந்த நிதி தனியார், பொது, சமூகத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இணைத்து, குடியிருப்பாளார்களுக்கு நன்மைகளை வழங்கும் ஒரு சிறப்பு முயற்சியாகும். இது சுற்றுப்புற உறவுகளை வலுப்படுத்துவதோடு, சமூகத்தில் ஒற்றுமை உணர்வையும் வளர்க்கிறது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய முயற்சியான ‘வளர்ந்து வரும் சமூகங்களுக்கான நிதி உதவி, குடியிருப்பாளர்களால் முன்னெடுக்கப்படும் சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. ‘தி மஜுரிட்டி டிரஸ்ட்’ அறநிறுவனம் வழிநடத்தும் இம்முயற்சிக்கு ஜிஐசி, யோங் ஹான் கோங் அறக்கட்டளை , ‘டைமொன் ஏசியா கேபிட்டல்’ ஆகியவை ஆதரவளிக்கின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ், தகுதியான குடியிருப்பாளர் முயற்சிகளுக்கு $10,000 வரை மானியங்களும், திட்ட மேம்பாடுகளுக்குத் தேவையான ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படும்.

