நன்கொடை அமைப்புகளுக்கு எஸ்எம்ஆர்டி கட்டமைப்பு முழுவதும் இலவச விளம்பரங்கள்

நன்கொடை அமைப்புகளுக்கு எஸ்எம்ஆர்டி கட்டமைப்பு முழுவதும் இலவச விளம்பரங்கள்

2 mins read
a2e38cee-0d77-4c9f-bd16-6dfa2d3761aa
விளம்பரங்கள், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை வழித்தடங்களில் உள்ள எம்ஆர்டி நிலையங்களிலும், புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்திலும், மற்றும் தீவு முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்த விளம்பரப் பலகைகளிலும் இடம்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொது நன்மதிப்புக் கழகம் (ஐபிசி) என்ற தகுதியைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நன்கொடை அமைப்புகள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எஸ்எம்ஆர்டியின் விளம்பரக் கட்டமைப்பு முழுவதும் கட்டணமின்றி விளம்பர இயக்கங்களை நடத்த முடியும்.

இந்தப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்துக்கும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கும் இடையேயான ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நன்கொடை அமைப்புகள், எஸ்எம்ஆர்டியின் விளம்பரப் பிரிவான ஸ்டெல்லர் ஏஸ் (Stellar Ace) உடன் இணைந்து பணியாற்றும்.

இந்த விளம்பரங்கள், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை வழித்தடங்களில் உள்ள எம்ஆர்டி நிலையங்களிலும், புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்திலும், மற்றும் தீவு முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்த விளம்பரப் பலகைகளிலும் இடம்பெறும்.

வெள்ளிக்கிழமையன்று (மே 29), டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் லைஃப்ஸ்டைல் ​​சென்டரில், ஐபிசி அங்கீகாரம் பெற்ற நன்கொடை அமைப்புகளுக்கு அதிக கவனத்தை ஈர்க்கும் பொதுத் தளங்களை வழங்குவதன் மூலம், அவற்றின் நிதி திரட்டலையும் தொண்டூழியர்களை அணுகுவதையும் வலுப்படுத்தும் நோக்கில், இரு அமைப்புகளும் ஒரு மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சிங்கப்பூரில் உள்ள நன்கொடைத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது போக்குவரத்துக் கட்டமைப்பில் $1 மில்லியன் வரையிலான விளம்பரம் இடம்பெறும் இடங்களுக்கு நிதியுதவி அளிக்க எஸ்எம்ஆர்டி உறுதியளித்துள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங் கூறினார்.

“இது, ஐபிசிக்களால் முன்னெடுக்கப்படும் நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்கொடைகள் அல்லது தொண்டூழியப் பணிகள் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க மேலும் பலரை முன்வர ஊக்குவிக்கவும் உதவும்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் சுமார் 700 ஐபிசிக்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் www.stellarace.com.sg/csr என்ற இணையத்தளத்தில் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, “நமது பல தனியார் நன்கொடை அமைப்புகள் மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு அசாதாரணமான பணிகளைச் செய்கின்றன. எனவே, நமது நன்கொடை அமைப்புகள் தங்களின் மிகவும் அர்த்தமுள்ள பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு எஸ்எம்ஆர்டியின் ஆதரவு பெரிதும் உதவும்,” என்றார்.

“எஸ்எம்ஆர்டி தனது போக்குவரத்து இடங்களான ரயில் நிலையங்கள், நடைமேடைகள், வழித்தடங்கள் ஆகியவற்றை சமூக ஈடுபாடு, கல்விசார் பரப்புரை, கலைகளில் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கான களங்களாகத் திறந்துவிடும்,” என்று திரு நியோ மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நன்கொடைபொதுப் போக்குவரத்துஎஸ்எம்ஆர்டி