சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பத்தில் மோசடி செய்தது தொடர்பாக பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாக மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஐந்து கட்டுமான நிறுவனங்களின் இயக்குநர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடங்குவர் என்று அமைச்சு கூறியது. சட்டவிரோத ஏற்பாடுகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 41 பேர் விசாரணையில் உதவி வருகின்றனர்.
இது தவிர, ஐந்து நிறுவனங்கள் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோரின் மத்திய சேமநிதிப் பங்களிப்பு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மத்திய சேம நிதிச் சந்தா செலுத்தப்பட்டதன் தொடர்பிலான விசாரணை அது என்றது அமைச்சு.
உள்ளூர்வாசிகளுக்கு மசே நிதிச் சந்தா செலுத்தியதன் மூலம் அதிகரிக்கப்படும் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, அதிகமான வெளிநாட்டினரை நியமிப்பதற்கான வேலை அனுமதிச்சீட்டுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிப்பது தெரியவந்தது.
வேலை அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பத்தில் பொய்யான உறுதிமொழிகளை அளிக்கும் குற்றத்திற்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, $20,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
வேலை அனுமதிச்சீட்டு பறிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய முடியாத வகையில் அவர்களுக்குத் தடை விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் தவிர, வேலை அனுமதி விண்ணப்பங்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய மோசடியான மசே நிதி பங்களிப்புகளுக்குத் தங்கள் விவரங்களை வழங்கி, நிறுவனங்களுடன் கூட்டுச் சதி செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
சட்டவிரோத வேலை தொடர்பான நடவடிக்கைகள் பற்றி அறிவோர் அதுகுறித்து தனது இணையப்பக்கத்தில் உள்ள படிவம் மூலம் புகார் அளிக்கலாம் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

