எட்டு ஆண்டுகளில் முதல்முறை குறைந்தது மோசடி எண்ணிக்கை

எட்டு ஆண்டுகளில் முதல்முறை குறைந்தது மோசடி எண்ணிக்கை

2 mins read
c43875e5-0d96-4241-a466-a6cd8a792708
தங்கக் கட்டிகளை வாங்கித்தரும்படி பாதிக்கப்பட்டோரிடம் கூறும் மோசடிகள் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் தலைதூக்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 50,000க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு அது 37,308க்குக் குறைந்தது.

மோசடிக்காரர்களிடம் இழந்த தொகையும் கடந்த ஆண்டு கணிசமாகக் குறைந்தது. 2024ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை $1.1 பில்லியன். கடந்த ஆண்டு அது $913. 1 மில்லியனாகப் பதிவானது.

சிங்கப்பூர்க் காவல்துறை மோசடிச் சம்பவங்கள் குறித்த வருடாந்திர புள்ளிவிவரங்களைப் புதன்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்டது.

மோசடிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தபோதும் தங்கக் கட்டிகள் தொடர்பான மோசடிகள் அதிகமாகத் தலைதூக்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். தங்கக் கட்டிகளை வாங்கித்தரும்படி பாதிக்கப்பட்டோரிடம் கூறும் மோசடிக்காரர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதையும் அவர்கள் சுட்டினர்.

பாதிக்கப்பட்டோரில் சிலர் மோசடிக்காரர்களிடம் தங்கக் கட்டிகளை ஒப்படைப்பது தொடர்பில் குறைந்தது 131 புகார்கள் கடந்த ஆண்டு பதிவாகின.

விசாரணைக்காக அல்லது முதலீட்டுக்காகத் தங்கக் கட்டிகளை வாங்கித்தரும்படி மோசடிக்காரர்கள் பெரும்பாலும் கூறினர்.

வங்கிக் கணக்குகளில் உள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் பணப் பரிவர்த்தகளை எளிதில் செய்ய முடியாததால் மோசடிக்காரர்கள் தங்கக் கட்டிகள் பக்கம் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆகப் பரவலாக மின்வர்த்தக மோசடிகள் நிகழ்ந்துள்ளன. அது தொடர்பில் 6,703 புகார்கள் செய்யப்பட்டன. மின்வர்த்தக மோசடிகளில் இழந்த தொகை $16.7 மில்லியன். 2024ஆம் ஆண்டு மின்வரத்தக மோசடி தொடர்பில் புகாரளிக்கப்பட்ட 11,665 சம்பவங்கள் மூலம் $17.5 மில்லியன் தொகையைப் பாதிக்கப்பட்டோர் இழந்தனர்.

அரசாங்க ஊழியரைப் போல ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு இரட்டிப்பானது.

2024ஆம் ஆண்டு 1,504ஆக இருந்த அத்தகைய ஆள்மாறாட்ட மோசடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 3,363ஆக அதிகரித்தது. அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை கடந்த ஆண்டு $242.9 மில்லியன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்