வெளிநாட்டு ஊழியர் சட்ட உதவி மையம் இலக்கைக் கடந்து சாதனை

வெளிநாட்டு ஊழியர் சட்ட உதவி மையம் இலக்கைக் கடந்து சாதனை

2 mins read
b47bbc4f-6815-49c9-88e7-57c8d5720d8d
சிராங்கூன் ரோட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் சட்ட உதவி மையம் வாரத்தில் ஐந்து நாள்கள் திறந்திருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கார் மோதியதால் காயமடைந்த இந்தோனீசிய பணிப்பெண் ஒருவர், காயத்திற்கு இழப்பீடு பெறுவது எவ்வாறு என்று தவித்தபோது வழக்கறிஞரைச் சந்திக்க அஞ்சினார்.

இன்னும் இரு வாரத்தில் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த அந்தப் பெண், விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநருடன் தனிப்பட்ட முறையில் தீர்வு காணும் நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரிடம் எந்த அளவுக்கு நியாயமான தொகையை இழப்பீடாகப் பெற வேண்டும் என்பது பணிப்பெண்ணுக்குத் தெரியவில்லை.

வெளிநாட்டு ஊழியர் சட்ட மையம் பற்றித் தெரிந்துகொண்ட அவர், ஊன்றுகோல்களின் உதவியுடன் அந்த மையத்திற்குத் தமது முதலாளிகளுடன் சென்றார்.

அந்த மையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்டச் சேவை வழங்கப்படுகிறது. அங்கிருந்த நூர் சுக்ரினா சலாம் என்னும் வழக்கறிஞர் அந்தப் பணிப்பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.

வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையை அவர் பெற்ற பின்னர், அவர் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த அவரது முதலாளிகள் தயாரானார்கள்.

“என்னால் இரவில் உறங்க முடியவில்லை. என் வாழ்நாளில் வழக்கறிஞரைச் சந்திப்பது இதுவே முதல்முறை,” என்று அந்தப் பணிப்பெண், ஆலோசனையின்போது கூறினார்.

பணிப்பெண் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் திருவாட்டி சுக்ரினா பேசினார்.

“வழக்கறிஞரைச் சந்திக்க வெளிநாட்டு ஊழியர்கள் பயப்படுகிறார்கள். சட்ட உதவி பெறுவதால் பிரச்சினை வந்துவிடுமோ என்பதும் வேலை பறிபோய்விடுமோ என்பதும் பயத்திற்கான காரணங்கள்,” என்றார் அவர்.

அந்தத் தவறான கண்ணோட்டத்தைப் போக்குவது மையத்தின் இலக்குகளில் ஒன்று என்றும் திருவாட்டி சுக்ரினா கூறினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் ஒரே மையம் அது. இதுபோன்ற இதர இலவச சட்ட ஆலோசனை நிலையங்கள் பொதுமக்களுக்கு உரியவை.

லிட்டில் இந்தியா வட்டாரத்தின் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் இலவசச் சட்ட உதவி மையம் வாரத்தில் ஐந்து நாள்கள் திறந்திருக்கும்.

வேலை தொடர்பான பிரச்சினைகள், குற்றம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், இதர சட்டச் சச்சரவுகள் போன்றவற்றுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு இலவச ஆலோசனை பெறலாம்.

வெளிநாட்டு ஊழியர் நிலையம், இலவசச் சட்ட உதவி வழங்கும் PBSG என்னும் அறநிறுவனம் ஆகியன இணைந்து அந்த மையத்தை நிறுவி உள்ளன.

2025 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது முதல் இதுவரை 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அந்த மையம் சேவையாற்றி உள்ளது.

ஓராண்டுக்குள் 120 ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்ற இலக்கை, சட்ட உதவி மையம் எளிதாகக் கடந்துவிட்டதாக வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் இயக்குநர் மைக்கல் லிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்