உலகக் கிண்ண காற்பந்து: சிங்கப்பூரில் வர்த்தகத்திற்குப் போதிய பலனில்லை

உலகக் கிண்ண காற்பந்து: சிங்கப்பூரில் வர்த்தகத்திற்குப் போதிய பலனில்லை

2 mins read
393276db-ac5d-4cb4-a793-2d04eea5ef5b
வெறிச்சோடிப் போன கடைவீதிகளில் ஒன்று. - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களைக் காண்பதில் உற்சாகம் மிகுந்திருந்தாலும், அதனால் இங்குள்ள வர்த்தகங்களுக்குப் போதிய பலனில்லை என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள உணவு, பானக் கடைகளுக்கு அந்த உற்சாகம் முழுமையாகப் பரவவில்லை என்றே சொல்லலாம்.

இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டிகள் வடஅமெரிக்காவில் நிகழ்வதால் நேர வித்தியாசம் காரணமாக ரசிகர் கூட்டத்தை உணவு, பானக் கடைகளில் அவ்வளவாகக் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. போட்டிகள் பின்னேரத்திலும் அதிகாலையிலும் நடைபெறுகின்றன.

அதிலும் குறிப்பாக, முக்கியமான பல ஆட்டங்கள் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை வேளையில் மூன்று மணி, ஐந்து மணி என நடைபெறுவதால் கடைகளில் அவர்கள் கூடுவது குறைந்துள்ளது.

எனவே, வணிக நேரத்தை நீட்டிப்பது பலன் தருமா என்னும் யோசனையில் உணவு, பானக் கடைகள் ஈடுபட்டு வருகின்றன.

அவ்வாறு யோசிக்கும் நிறுவனங்களில் ஒன்று ‘1-ஆர்டன்’. இனி குறிப்பிட்ட சில ஆட்டங்களுக்கு வணிக நேரத்தை நீட்டிக்க அது முடிவு செய்துள்ளது.

இருப்பினும், முழுப் போட்டி அட்டவணையையும் திரையிடுவதற்குப் பதிலாக, இரண்டு அரையிறுதி ஆட்டங்கள், மூன்றாம் இடத்திற்கான போட்டி, இறுதிப் போட்டி ஆகியவற்றை மட்டும் திரையிட தற்போது அது திட்டமிட்டுள்ளது.

“இந்த உலகக் கிண்ணப் பருவத்தில் இறுதிச் சுற்றுப் போட்டிகள் மிகவும் தாமதமான நேரங்களில் நடைபெறுவதால், எந்தெந்த ஆட்டங்களைத் திரையிடுவது என்பது குறித்து நாங்கள் கூடுதல் கவனத்துடன் தேர்வு செய்கிறோம்,” என்றார் ‘1-ஆர்டன்’ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் இணை இயக்குநர் இம்மெல்லியா இஸலினா.

2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடைபெற்றபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் ஐந்து மணி நேரம் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் எழவில்லை.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துஉணவுக் கடை