பொதுப் பயனீட்டுக் கழகம், கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நான்கு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிற்பகல் 3 மணியளவில் அது வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளில், வெள்ள அபாயம் நிலவும் பகுதிகளை அது பட்டியலிட்டது.
லோரோங் கிஸ்மிஸ், தோ தக் ரைஸ் சந்திப்பு, சன்செட் டிரைவ், சன்செட் வே சந்திப்பு, ஜாலான் பூன் லே (என்டர்பிரைஸ் சாலை முதல் இன்டர்நேஷனல் சாலை வரை), டனர்ன் சாலை (ரைஃபிள் ரேஞ்ச் சாலை முதல் பிஞ்சாய் பார்க் வரை) ஆகியவை இந்த இடங்கள்.
பொதுமக்கள் ஒரு மணி நேரத்துக்கு இந்தப் பகுதிகளைத் தவிர்க்கும்படி கழகம் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2.40 மணி முதல் 3.40 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்படுவதாகக் கழகம் பிற்பகல் 2.30 மணியளவில் குறிப்பிட்டிருந்தது.

