துவாஸ் கிடங்கில் தீ; போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்பாளர்கள்

துவாஸ் கிடங்கில் தீ; போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்பாளர்கள்

1 mins read
daf09173-e60a-4cb1-a8fb-4bb0a651c3c5
சரக்குக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கடுமையாகப் போராடி தீயணைப்பாளர்கள் அணைத்தனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

துவாஸ் சரக்குக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அதிகாலை அந்தக் கிடங்கில் தீ மூண்டது. சம்பவ இடத்திற்கு 20 அவசர வாகனங்களுடன் ஏறக்குறைய 80 தீயணைப்பாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எண் 3 கல் கிரசெண்டில் உள்ள கிடங்கில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகவும் உடனடியாகத் தீயணைப்பாளர்களுடன் தீயணைக்கும் வாகனங்களை அனுப்பி வைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாலை 5 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு காற்பந்துத் திடலின் அளவு பரப்பளவு கொண்ட கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடினர்.

காலை 6 மணியளவில் வெளியிட்ட பதிவில், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஏழு வாகனங்களும் இரண்டு தீயணைப்பு இயந்திரங்களும் ஒரு வான்வழிக் கண்காணிப்புக் கருவியும் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காலை 7.45 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அது கூறியது.

கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கழிவுப் பொருள்கள், ரசாயனங்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

கடந்த 2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 125 தொழிற்சாலை வளாகங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது, 2024ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீச்சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 27.5 விழுக்காடு அதிகம். அண்மையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தீதொழிற்சாலைசரக்குதீ விபத்துசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை