பீஷானின் ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் உள்ள உணவகமொன்றில் மூண்ட நெருப்பால் 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நடந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, அன்றிரவு மணி 7.10க்கு எண் 9, பீஷான் பிளேஸ் எனும் முகவரியில் உள்ள உணவகமொன்றில் தீப்பிடித்ததாகத் தகவல் கிடைத்தது என்று தெரிவித்தது. அந்த முகவரியில்தான் ‘ஜங்ஷன் 8’ கடைத்தொகுதி உள்ளது.
முதல் தளத்தில் உள்ள உணவகத்தின் மேசையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி அல்லது உணவை வாட்டும் கருவியிலும் புகைபோக்கிக் குழாய் அமைப்பிலும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் குழாய்களைக் கொண்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஜப்பானிய உணவகமான யாக்கினிகு லைக்கில் தீப்பற்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திற்குத் தெரியவந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து ஏறக்குறைய 120 பேரைக் காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.
புகையைச் சுவாசித்ததாகக் கூறிய ஒருவர் மருத்துவப் பரிசோதனைக்காகச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.
பாதுகாப்புச் சோதனைகளும் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், ‘ஜங்ஷன் 8’ கிளை தற்காலிகமாக மூடப்படும் என்று ஜப்பானிய உணவகத்தின் பேச்சாளர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவகம், அதன் மற்ற கிளைகளிலும் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
“எங்களிடம் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் நடப்பில் உள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்தும் எங்களின் தற்போதைய நடைமுறைகள் குறித்தும் விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த இந்த மதிப்பாய்வின் மூலம் தேவைப்படும் அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு உணவகம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.
‘ஜங்ஷன் 8’ கடைத்தொகுதியில் உள்ள மற்ற கடைகள் வழக்கம்போல் இயங்குகின்றன.


