சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ; ஊழியர் உயிரிழப்பு

சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ; ஊழியர் உயிரிழப்பு

2 mins read
6e674a13-1fa7-498c-8433-4232795abf9c
மருத்துவ உதவி தேவைப்பட்ட பயணிகளை மருத்துவ உதவியாளர்கள் கவனிக்கின்றனர். - படம்: கடல்துறை, துறைமுக ஆணையம்/ஃபேஸ்புக்

சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து, இந்தோனீசியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

நான்கு பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கப்பலில் இருந்த 271 பயணிகளில், 139 பேர் சிங்கப்பூரர்கள் என்று காலை 11.50 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.

முன்னதாக, காலை 8.40 மணி அளவில் வெளியிடப்பட்ட செய்தியாளர் அறிக்கையில், முதற்கட்ட தகவல்கள்படி கப்பலில் 224 பயணிகள் இருந்தனர் என்றும் அவர்களில் 185 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் ஆணையம் கூறியிருந்தது.

அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

‘வொர்ல்டு லெகசி’ எனும் அந்த உல்லாசக் கப்பலின் ஒன்பதாவது தளத்தில் அதிகாலை 4 மணி அளவில் தீ ஏற்பட்டது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறை தீயணைப்பாளர்கள் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ உதவி தேவைப்பட்ட பயணிகளை மருத்துவ உதவியாளர்கள் கவனித்துக்கொண்டனர்.

கடல்துறை, துறைமுக ஆணையத்தின் சுற்றுக்காவல் படகு, கடலோரக் காவல் படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு ஆகியவை, ராஃபிள்ஸ் நங்கூரமிடும் பகுதியில் (Raffles Reserved Anchorage) நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்தக் கப்பலைக் கவனித்துவருகின்றன.

சிறிது நேரத்திலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. கப்பலில் 388 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் யாரும் சிங்கப்பூரர்கள் அல்லர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த ஊழியரின் உடல் நிலத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதன் தொடர்பில் செயல்பட்டுவருவதாகவும் ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீச்சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

‘வொர்ல்டு லெகசி’ கப்பலை விளம்பரப்படுத்தும் ‘வொர்ல்டு க்ரூசஸ்’ நிறுவனத்துக்கான உள்ளூர் வர்த்தக மேம்பாட்டை நிர்வகிக்கும் சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘டிராகன் க்ரூசஸ்’ பயண முகவை, அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது.

“பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பே நமது முன்னணி முன்னுரிமை,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்