சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீடொன்றில் தீ மூண்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் பிற வீடுகளிலிருந்து கிட்டத்தட்ட 150 பேர் வெளியேற்றப்பட்டனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அதிகாலை வாக்கில் தீ மூண்டதாகத் தெரிகிறது.
சுவா சூ காங் நார்த் 6ல் உள்ள இயூ மெய் கிரீன் கூட்டுரிமை வீடுகளில் தீ மூண்டது குறித்து அதிகாலை மணி 4.50க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அங்குள்ள புளோக் 52ல் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது.
மூன்றாம் தளத்தில் உள்ள படுக்கையறை ஒன்றில் மூண்ட தீயை அதிகாரிகள் அணைத்தனர். அறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாகத் தீ மூண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகையைச் சுவாசித்ததற்காக இருவர் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

