பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சரக்குக் கப்பலில் தீ; யாருக்கும் காயமில்லை

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சரக்குக் கப்பலில் தீ; யாருக்கும் காயமில்லை

1 mins read
a770703a-b1a4-4122-b6e4-1b09a71d52ca
பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சரக்குக் கப்பலின் கொள்கலன் ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் அது லண்டனில் பதிவு செய்யப்பட்ட கப்பல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.

கப்பலில் மூண்ட தீ அன்று இரவே அணைக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையில் தீயை அணைக்கும் பணி இரவு முழுவதும் தொடர்ந்ததாக ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட்ட தகவலில் ஆணையம் தெரிவித்தது.

கப்பலில் இருந்த எல்லாப் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘எவர் லீனியன்ட்’ என்னும் பெயருடைய அந்தக் கப்பலில் தீப்பற்றியது பற்றி பிற்பகல் 3 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

எண்ணெய்க்கசிவு எதுவும் தென்படவில்லை என்றும் தீச்சம்பவத்தால் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் துறைமுகப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்று கண்காணிப்புக் கப்பல்களை அந்த வட்டாரத்தில் ஆணையம் நிறுத்தியிருந்தது.

குறிப்புச் சொற்கள்
துறைமுகம்கடல்துறைகப்பல்