வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைக் கையில் வைத்திருந்தால் அபராதம்

சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டத் திருத்தங்கள் அறிமுகம்

வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைக் கையில் வைத்திருந்தால் அபராதம்

2 mins read
8cc557d9-8c05-4066-9597-82318962e452
சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்து, விதிமீறல்களைக் குறிவைக்கும் நோக்கில், அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் சட்டத் திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களைக் கையில் வைத்திருந்தாலே, இனிச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும்.

தற்போது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 65B பிரிவின்படி, வாகனத்தை ஓட்டும்போது வாகன ஓட்டிகள் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தினால் 1,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறுமாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது.

கருவிகளின் இயக்கத்தை நிரூபிப்பதில் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கவும், வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது முழுக்கவனமும் அதில் இருப்பதை உறுதிசெய்யவும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்துவது, திறன்பேசித் தாங்கிகளில் வைத்துக்கொள்வது, திறன்கடிகை (smart watch) வழியாகப் பேசுவது, சாலை நிறுத்தம், நெரிசல் நிறுத்தங்களின்போது பயன்படுத்துவது உள்ளிட்டவை குற்றமாகக் கருதப்படாது.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) உள்துறை அமைச்சு தாக்கல் செய்த சாலைப் போக்குவரத்து (பல்வகைத் திருத்த) மசோதாவில் இது குறிப்பிடப்பட்டது.

கடந்த 2021க்கும் 2025க்கும் இடையிலான காலகட்டத்தில் விபத்து மரணங்கள் 24 விழுக்காடும், போக்குவரத்து விதிமீறல்கள் 38 விழுக்காடும் அதிகரித்தன. இப்போக்கைத் தடுக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதுடன், போக்குவரத்து அபராதங்களும் கடுமையாக்கப்படும்.

மற்றொரு வாகன ஓட்டிக்கு வேண்டுமென்றே ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது, இனிச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.

இவ்வகை விபத்துகளால் மரணமோ, கடுமையான காயமோ ஏற்பட்டால் அது கவனக்குறைவுடன், ஆபத்து விளைவிக்கும் நோக்கில் வாகனம் ஓட்டும் குற்றத்திலோ, மரணம் விளைவிக்கும் குற்றத்திலோ சேராது. எனினும், தனியொருவர் அல்லது குடும்பத்தைப் பாதிக்கும் இச்செயல்களில் ஈடுபடுவதைக் குற்றமாகக் கருதி, இனி 15 ஆண்டுவரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்; பிரம்படியோ, அபராதமோ விதிக்கப்படும். மேலும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்படும்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள், போதைப் பொருள்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுவதும் குற்றமாகக் கருதப்படும்.

ஆயிரக்கணக்கான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாளும் காவல்துறையினர், பல விதிமீறல்களையும் நேரடியாக ஆய்வுசெய்து ஓட்டுநர் விவர அறிக்கையைச் (Notice to Furnish Driver’s particulars) சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அமலாக்க நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கில், தானியக்க முடிவெடுக்கும் முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது, அதிவேகமாக ஓட்டுதல், சாலை விதிமீறல்கள் உள்ளிட்ட நிழற்படங்களை வைத்து அடையாளம் காணும் குற்றங்களுக்குப் பொருந்தும்.

அந்த அறிக்கையின் தொடர்பில் முறையீடுகள் இருந்தால், அவற்றைப் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வுசெய்யும்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்துசாலைப் பாதுகாப்புசாலை விபத்துபுதிய சட்டம்சட்டத் திருத்தம்நாடாளுமன்றம்