மூன்று தேர்கள், நான்கு தெய்வங்கள் ஒன்றாய்க் கூடிய திருவிழா

மூன்று தேர்கள், நான்கு தெய்வங்கள் ஒன்றாய்க் கூடிய திருவிழா

2 mins read
91f1a15a-06b7-43bf-b59e-242991ee8c60
நவாக் ஷரி திருவிழாவுக்காக நான்கு அம்மன் திருவுருவங்கள் இணைந்து காட்சியளிக்கின்றன. - படம்: காமாட்சி சந்திரசேகர்
Google News Preferred Icon

காமாட்சி சந்திரசேகர்

சிங்கப்பூரின் வெவ்வேறு ஆலயங்களைச் சேர்ந்த அம்மன் உற்சவத் திருவுருவங்களை தோ பாயோவிலுள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய வளாகத்தில் பக்தர்கள் ஒருசேர தரிசித்தனர். 

நவாக் ஷரி திருவிழாவின் முத்தாய்ப்பு அங்கமாக தேர்களின் சங்கமம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) கோலாகலமாக நடைபெற்றது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களிலிருந்து தேர்கள் இந்த ரத உற்சவத்தில் பங்கேற்றன.

மூன்று ஆலயங்களிலிருந்து உற்சவத் திருமேனிகளைத் தாங்கும் வெள்ளித் தேர்கள் தோ பாயோ ஆலய முகப்பில் கூடுவது வழக்கம்.

நிறங்கள் நிறைந்த தோற்றத்துடன் பல்லக்கில் சுமக்கப்படும் திருவுருவங்கள்
நிறங்கள் நிறைந்த தோற்றத்துடன் பல்லக்கில் சுமக்கப்படும் திருவுருவங்கள் - படம்: காமாட்சி சந்திரசேகர்

மார்ச் 5 தொடங்கிய இந்தப் பதினொரு நாள் திருவிழா, ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலகட்டமாகும்.

மலர்களாலும் மணி நிறைந்த அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் மின்னும் வெள்ளித் தேர்களில் பவனி வந்தன. 

தேரில் வீற்றிருக்கும் தேவிக்குச் சடங்குகள் செய்யப்படுகின்றன.
தேரில் வீற்றிருக்கும் தேவிக்குச் சடங்குகள் செய்யப்படுகின்றன. - படம்: காமாட்சி சந்திரசேகர்

நான்கு திருவுருவங்களைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

“தேவியர்களை அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஒரே இடத்தில் காண்பது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது,” என்று 50 வயது பக்தர் உமாதேவி கூறினார்.

நான்கு கோயில்களின் ஒருங்கிணைப்புக்கு ஆற்றப்பட்ட உழைப்பு சாதாரணமன்று என ஆலயத்தில் தொண்டு செய்துவரும் 34 வயதான தொண்டூழியர் பிரியவர்ஷினி தெரிவித்தார்.

இளையர்கள் காட்டிய ஈடுபாடு இவ்விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்ததாக ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரான விஜயந்திரன் கிருஷ்ணன், 67, தெரிவித்தார்.

“இளையர்கள் நம் சமயப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் முன்னின்று உழைக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கோவில்திருவிழாபக்தர்கள்இந்து அறக்கட்டளை வாரியம்