சிங்கப்பூரில் குடும்பங்களின் இடைநிலை வருமானம் முதல் முறையாக $12,000ஐக் கடந்தது

சிங்கப்பூரில் குடும்பங்களின் இடைநிலை வருமானம் முதல் முறையாக $12,000ஐக் கடந்தது

3 mins read
70803196-c4db-44e1-805f-66c0d3377ac8
2025ல் சிங்கப்பூரில் குடும்பங்களின் இடைநிலை வருமானம் முதல் முறையாக $12,000ஐக் கடந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2025ல் சிங்கப்பூர்க் குடும்பங்களின் இடைநிலை மாத வருமானம், பணவீக்கத்தைச் சரிசெய்வதற்குமுன் 7.7 விழுக்காடு உயர்ந்தது. 2024ல் $11,558ஆக இருந்த குடும்ப வருமானம், 2025ல் $12,446ஆக அதிகரித்தது. இது, $12,000ஐக் கடந்திருப்பது இதுவே முதன்முறை.

புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்ட ‘2025ஆம் ஆண்டின் முக்கியக் குடும்ப வருமானப் போக்குகள்’ அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

வருமானத்தைக் கணக்கிடுவதில் மாற்றம்

குடும்ப வருமானம் கணக்கிடப்படும் முறையில் இவ்வாண்டு புள்ளிவிவரத் துறை ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. வருமானம் என்பதற்கான வரையறையை, வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிடுவது மட்டுமன்றி முதலீடு, வாடகை உள்ளிட்ட இதர வழிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் இம்முறை புள்ளிவிவரத் துறை கணக்கில் கொண்டுள்ளது.

வேலையைச் சாராத வருமானங்களான முதலீட்டு ஈவுத்தொகைகள், வாடகை வருமானம், ஓய்வூதியக் காப்புறுதி, மத்திய சேமநிதி வழங்குதொகை போன்றவை இந்தப் புதிய, பரந்த அளவீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக, வேலை செய்பவர்கள் யாரும் இல்லாத குடும்பங்களும் இக்கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாதச் சம்பளத்தை நம்பியில்லாமல் முதலீடு அல்லது ஓய்வூதியத்தை மட்டுமே சார்ந்திருக்கும் பல குடும்பங்களைக் கொண்ட சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தைப் பற்றி இன்னும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும்.

பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு கணக்கிடப்படும்போது, 2025ல் குடும்பங்களின் இடைநிலை மாதாந்தர வருமானம் 6.8 விழுக்காடு கூடியது.

அதேபோல், சம்பளம் மூலமான வருமானம், வேலை சாராத வருமானம் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்குமான இடைநிலை வருமானமும் 2025ல் அதிகரித்தது. பணவீக்க அடிப்படையில் மதிப்பிடப்பட்ட வருமானம் (real income), பணவீக்க அடிப்படையில மதிப்பிடப்படாத வருமானம் (nominal income) இரண்டிற்கும் இது பொருந்தும்.

2020 முதல் 2025 வரை, இடைநிலை வருமானம் ஒட்டுமொத்தமாக 17 விழுக்காடு உயர்ந்தது.

வருமான வளர்ச்சி பரந்துபட்ட அளவில் இருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளும்போது, சராசரி தனிநபர் மாதக் குடும்ப வருமானம் அனைத்து வருமானப் பிரிவுகளிலும் அதிகரித்துள்ளது.

2025ல் மட்டும், பல நிலைகளில் தனிநபர் நிகர வருமானம் 3 விழுக்காடு முதல் 12.8 விழுக்காடு வரை உயர்ந்தது. 2020 முதல் 2025 வரை, தனிநபர் நிகர வருமானம் ஆண்டுக்கு 3.8 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

பெரும்பாலானோருக்கு வேலை மூலம் கிடைக்கும் வருமானமே வாழ்வாதாரத்துக்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்தப் போக்கு சற்று மாறிவருகிறது. 2024ல் மொத்தக் குடும்ப வருமானத்தில் 81.1 விழுக்காடாக இருந்த வேலை வருமானம், 2025ல் 79.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இந்த மாற்றம், கீழ்மட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினரிடையே தெளிவாகத் தெரிகிறது. இத்தரப்பினருக்கு வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தின் பங்கு குறைந்ததுள்ளது. மாறாக, அவர்கள் வேலை வருமானத்தை அதிகம் சார்ந்திருக்காமல் இதர வழிகளை நம்பியுள்ளனர்.

இவர்களது வருமானத்தில் 40.9 விழுக்காடு, முதலீட்டு வருமானமாக (எடுத்துக்காட்டாக, மசேநிதி வட்டி வருமானம்) உள்ளது. மசேநிதி ஓய்வுக்காலத் தொகைத் திட்டம், மூத்தோர் ஆதரவுத் திட்டம் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் இதர வருமானம் இவர்களது வருமானத்தில் 37 விழுக்காடாக உள்ளது.

அரசாங்க மானியங்களையும் வரிகளையும் கணக்கில் கொண்ட பிறகு, வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் சிங்கப்பூரின் ‘ஜினி குறியீடு’ 2025ல் 0.379ஆகக் குறைந்துள்ளது. இது, 2015க்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த அளவாகும்.

‘2025ஆம் ஆண்டின் முக்கிய குடும்ப வருமானப் போக்குகள்’ அறிக்கையை www.singstat.gov.sg என்ற சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்
வருமானம்சந்தைவேலைவாய்ப்புபொருளியல்