பொய்ச் செய்திகள் சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும்: பிரதமர் வோங் எச்சரிக்கை

பொய்ச் செய்திகள் சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும்: பிரதமர் வோங் எச்சரிக்கை

2 mins read
c8192bad-126f-4830-baff-0ef30b3a9c57
எஸ்பிஎச் மீடியா அரங்கத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) நடைபெற்ற கலந்துரையாடலில் எஸ்பிஎச் பிரஸ் கிளப் உறுப்பினர்களிடம் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார். கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணை ஆசிரியர் ஸாக்கிர் உசேன் (வலது) வழிநடத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தவறான, பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமையன்று (ஜூன் 8) தோ பாயோவில் உள்ள எஸ்பிஎச் மீடியா அரங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் எஸ்பிஎச் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் வோங் பேசினார்.

பொய்ச் செய்திகள் சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும் என்று பிரதமர் வோங் எச்சரித்தார். அண்மையில் இந்தியச் சமூகத்தை இலக்காகக் கொண்டு, சீனாவைச் சேர்ந்த இணையத்தளம் வழியாகப் பரப்பப்பட்ட 14 பதிவுகளை அதிகாரிகள் முடக்கியதை அவர் சுட்டினார்.

பொய்ச் செய்திப் பரவலைத் தடுக்க ‘பொஃப்மா’ போன்ற சட்டங்கள் இருந்தாலும், ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்டு நம்பகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள்தொகை, குடிநுழைவு

மக்கள்தொகை தொடர்பில் முன்னர் வகுக்கப்பட்ட 6.9 மில்லியன் எனும் இலக்கை எட்ட வெகுகாலம் பிடிக்கும் என்றார் பிரதமர்.

2025ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 6.11 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. மக்கள்தொகை வீழ்ச்சியைத் தவிர்த்து, நிலைத்தன்மையைப் பேணவே அரசாங்கம் முயல்வதாகப் பிரதமர் வோங் கூறினார்.

புதிய குடியேறிகள் சிங்கப்பூரின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதை உறுதிசெய்த பின்னரே குடியுரிமை வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர் எப்போதும் திறந்த மனம் படைத்த சமூகமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை மாற்றம்

அண்மையில் மனிதவள, சுகாதார மூத்த துணையமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் கோ போ கூன் விலகியதை அடுத்து, அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழுமா என்ற கேள்விக்குப் பிரதமர் வோங் பதிலளித்தார்.

அமைச்சரவை என்பது எப்போதும் முழுமையடைந்த ஒன்றன்று எனவும் அணியை வலுப்படுத்துவது குறித்தும் புதியவர்களைக் கொண்டுவருவது குறித்தும் தாம் எப்போதும் சிந்தித்து வருவதாகவும் அவர் கூறினார். இது குறித்த முறையான அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான டாக்டர் கோ, குடும்பப் பொறுப்புகளைக் காரணம் காட்டி காட்டி மூத்த துணையமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

இருப்பினும், தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தொடர்கிறார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்லாரன்ஸ் வோங்எஸ்பிஎச் மீடியாபொய்ச் செய்திமக்கள்தொகைஅமைச்சரவை