உளவுத் தகவல்களைப் பெற போலிச் செயல்: மர்ம அமைப்பு பற்றி எச்சரிக்கைக் குரல்

உளவுத் தகவல்களைப் பெற போலிச் செயல்: மர்ம அமைப்பு பற்றி எச்சரிக்கைக் குரல்

2 mins read
4c7ae3b6-7898-452d-b6a7-00f173f3cce1
2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் அமைப்பின் இணையத்தளம். - படம்: இணையத்தளத் திரைக்காட்சி
Google News Preferred Icon

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் கொள்கை ஆய்வு நிறுவனம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்று போலியாக உருவாக்கப்பட்டதைப்போலத் தோன்றும் பணியாளர் சுயவிவரங்களைப் பயன்படுத்தி வருகிறது.

ஆசியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் கூறப்படும் அந்த அமைப்பு, உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்தும் பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் இருந்தும் தகவல்களைப் பெறும் முயற்சியில் அவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.

‘கிழக்காசிய உத்திபூர்வ ஆய்வுக் கழகம்’ (ஐஇஏஎஸ்எஸ்) என்ற பெயருடைய அந்த அமைப்பு சிங்கப்பூர், தைவான் போன்ற இடங்களில் உள்ளோரை அணுகியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.

அந்த அமைப்பின் செயல் குறித்து ‘சத்தாம் ஹவுஸ்’ என்னும் பிரிட்டிஷ் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் இணை ஆய்வாளரான பில் ஹேட்டன் என்பவர் முதன்முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பினார்.

அது பற்றி ஜூன் 30ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். மேற்கத்திய பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்களை அணுகி வரும் அந்த அமைப்பு பற்றி வேறு யாருக்கேனும் ஏதாவது தெரியுமா என்று அந்தப் பதிவில் அவர் வினவியிருந்தார்.

அதன் பிறகு அந்த அமைப்பு தொடர்பான விவரங்களை அறிய ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ முயன்றது.

அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ள அதன் நிபுணர்களை அரசாங்க ஆவணங்கள் மூலமாகவோ நிபுணர்களுக்கான தரவுத் தளங்கள் வாயிலாகவோ அடையாளம் காண இயலவில்லை என்று அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.

சில நிபுணர்களின் சுயவிவரப் படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதைப் போலத் தோன்றுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த அமைப்பு 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்டதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும், இங்கு அது பதிவு செய்யப்பட்டதற்கான சான்று எதனையும் தன்னால் காண இயலவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்