அதிக வருவாய் ஈட்டும் 279 பேரை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) பிடித்துள்ளது.
வருமான வரியைக் குறைக்க தனியார் நிறுவனங்களை உருவாக்குவது போன்ற போலியான ஏற்பாடுகளைச் செய்ததற்காக அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்புடைய 124 சம்பவங்கள் மீது 2021ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக கூடுதல் வரி விதித்து $49 மில்லியனை ஆணையம் மீட்டதாக ஜூலை 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும், வரி விலக்கிற்குரிய ஈவுத்தொகையாக அல்லது வட்டி இல்லா பங்குதாரர் கடனாக வரி செலுத்துவோர் லாபத்தை எடுத்துக்கொண்டதும் அடங்கும்.
வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்வது குற்றம். ஆனால், பல்வேறு ஏற்பாடுகள் மூலம் நிதியைத் திசைதிருப்பி வரி ஏய்ப்பு செய்வது குற்றமாகாது.
குறைந்த வரி செலுத்துவதைத் தவிர இந்தப் பரிவர்த்தனைகளுக்கு வேறு உண்மையான நோக்கம் இல்லாத பட்சத்தில், அதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் கூடுதல் வரிகளை வசூலிப்பதற்கான சாத்தியம் உண்டு.
வருமானத்தின் பெரும்பகுதியைத் தங்கள் நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் அதிகபட்ச தனிநபர் வரி விகிதத்தைத் தவிர்க்கலாம் என்ற கருத்து, விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றாதவர்களிடம் உள்ளது.
ஒரு மில்லியன் வெள்ளி வருவாய் ஈட்டுவோருக்கு விதிக்கப்படும் 24 விழுக்காட்டு வரியைத் தவிர்த்துவிட்டு, நிறுவனங்களின் லாபத்திற்கான 17 விழுக்காட்டு வரியை மட்டுமே செலுத்துவது அவர்களின் நோக்கமாக இருக்கும்.
பல் மருத்துவரின் தந்திரம் பலிக்கவில்லை
அந்த வகையில், பல் மருத்துவர் ஒருவர் தமது சம்பளத்தை நிறுவன லாபமாகக் கணக்குக் காண்பிக்க நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மருந்தகம் ஒன்றில் பல் மருத்துவராக வேலை செய்வதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சம்பளமாக ஏறத்தாழ $280,000 ஈட்டி வந்த அவர், தமது சொந்த நிறுவனம் அதனை வருவாயாகப் பெறுவதைப் போன்ற ஏற்பாட்டைச் செய்தார்.
அதன் பிறகு, 2013ஆம் ஆண்டுமுதல் 2016ஆம் ஆண்டுவரை தமது நிறுவனத்தில் $40,000க்கும் $110,000க்கும் இடைப்பட்ட தொகையைச் சம்பளமாகப் பெறுவதாகக் கணக்குக் காட்டினார்.
ஆனால், உண்மை நிலவரப்படி, அந்த நான்காண்டுகளில் தமது சொந்த நிறுவனத்திடமிருந்து ‘வரி விலக்கு’ பெற்ற ஈவுத்தொகையாக $765,000, அதாவது ஆண்டுக்கு சராசரியாக $190,000, என்ற கணிசமான கூடுதல் வருமானத்தைப் பெற்றிருந்தார்.
அதனைக் கவனித்த சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், வருமான வரிச் சட்டப்பிரிவு 33ஐப் பயன்படுத்தியது. அதன்படி, அவருக்குக் கிடைத்த ஈவுத்தொகையும் அவரது தனிப்பட்ட வருவாயாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்பட்டது.


