ஃபேர்பிரைஸ் குழுமம், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தனது பேரங்காடிகளில் 500க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தாது. தற்போது 300 பொருள்களின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய விநியோகத் தொடரில் ஏற்பட்டுள்ள தடங்கல்களையும் அதனால் தொடரும் பொருளியல் நெருக்கடியையும் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்குழுமம் வெள்ளிக்கிழமை (மே 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஃபேர்பிரைஸ் சொந்த தயாரிப்புகளான அரிசி, சமையல் எண்ணெய், முட்டை, காய்கறிகள், புதிய மற்றும் உறைய வைக்கப்பட்ட இறைச்சி வகைகள், பால் உள்ளிட்ட அன்றாடச் சமையல் பொருள்களுடன் மூத்தோர், குழந்தைகளுக்கான பராமரிப்புப் பொருள்களும் இதில் அடங்கும்.
“கடந்த ஏப்ரலில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை, குடும்பங்கள் தங்களின் செலவினத்தைச் சமாளிப்பதில் நல்ல பலனைத் தந்தது. இருப்பினும், உலகளவில் நீடித்துவரும் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ள கூடுதலான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
“சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் எங்களின் ஆகச்சிறந்த ஆதரவு என்பது பொருள் விலையில் நிலைத்தன்மையைப் பேணுவதே,” என்றார் ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா.
பொருள்களின் விலையை நிலையாக வைத்திருப்பதன் மூலம், குடும்பங்கள் தங்களின் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்றார் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங்.
முதியவர்கள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாவோரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், வரும் மாதங்களில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.

