மூத்தோருக்கான பகுதிநேர மறுவேலை நியமன மானியம் நீட்டிப்பு: மனிதவள அமைச்சு

2 mins read
b0d1688d-0ec5-43df-90b8-81a63764fbd3
பகுதிநேரமாகப் பணியார்த்தப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த ஊழியருக்கும் முதலாளிகள் $2,500 மானியம் பெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த ஊழியர்களைப் பகுதிநேர வேலையில் மீண்டும் அமர்த்தும் முதலாளிகளுக்கான மானியத்தை மனிதவள அமைச்சு மேலும் ஈராண்டுக்கு நீட்டிப்பதாக வியாழக்கிழமை (டிசம்பர் 18) அறிவித்துள்ளது.

மூத்த ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலைத் திட்டத்தையும் வாழ்க்கைத்தொழில் திட்டத்தையும் வகுக்கும் முதலாளிகளுக்கு அது பொருந்தும்.

மூத்த ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பகுதிநேர மறுவேலை நியமனத்திற்கான மானியத்தை மனிதவள அமைச்சு 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கிறது.

மூத்த ஊழியர்களைப் பகுதிநேர வேலையில் நியமிக்கும் முதலாளிகளுக்கு ஆதரவளிக்க அவ்வாறு செய்வதாக அமைச்சு விளக்கம் அளித்தது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் மூடப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 18ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

பகுதிநேரமாக நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த ஊழியருக்கும் மனிதவள அமைச்சு தன் பங்காக முதலாளிகளுக்கு $2,500 மானியம் வழங்குகிறது. அதிகபட்சம் முதலாளிகள் $125,000 வரை மானியம் பெறலாம்.

“2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பகுதிநேர மறுவேலை நியமனத்திற்கான மானியத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது,” என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

நவம்பர் மாத நிலவரப்படி மானியத்தைப் பயன்படுத்தி மூத்த ஊழியர்களைத் தக்க வைத்துக்கொண்ட முதலாளிகளின் எண்ணிக்கை 7,500க்கும் அதிகம். அதாவது 65,000க்கும் அதிகமான மூத்த ஊழியர்கள் பயனடைந்தனர்.

2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை $92 மில்லியனுக்கும் அதிகமான மானியம் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை, தொண்டூழிய நல அமைப்புகள் போன்ற லாப நோக்கமற்ற அமைப்புகள், சமூகங்கள் உள்ளிட்டவை தவிர்த்து சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அல்லது இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் மானியத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மானியத்துக்கு விண்ணப்பம் செய்யும் காலகட்டத்தில் நிறுவனத்தில் குறைந்தது ஓர் ஊழியரின் வயது 60 அல்லது அதற்கும் மேற்பட்டு இருக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்