மலாய்/முஸ்லிம் சமூகத்தினரை ஆதரிக்கும் புதிய பொருளியல் மீட்சிக் குழு

மலாய்/முஸ்லிம் சமூகத்தினரை ஆதரிக்கும் புதிய பொருளியல் மீட்சிக் குழு

2 mins read
c78c780c-1680-4fc0-83aa-b77f342e3470
(இடமிருந்து) தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, உள்துறை மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்த புதிய பொருளியல் மீட்சிக் குழு ஒன்று நிறுவப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அறிமுகம் கண்ட பொருளியல் உத்தி மதிப்பீடுகள் சார்ந்த இடைக்கால அறிக்கையின்கீழ் (இஎஸ்ஆர்) புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பார்க்ராயல் கலெக்‌ஷன் மரினா பேயில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற்ற அமைச்சரின் நோன்புப் பெருநாள் விருந்து நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஃபைஷால், அறிக்கை கண்டறியும் பரிந்துரைகளைக் கவனித்து அதன்வழி மலாய்/முஸ்லிம் சமூகத்திற்கு இந்த மீட்சிக் குழு ஆதரவளிக்கும் என்றார்.

“இதன்வழி, நிச்சயமற்ற உலக சூழலுக்கு மத்தியில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் சிங்கப்பூர்ப் பொருளியலின் ஒட்டுமொத்த மீள்திறனுக்குப் பங்களிக்க முடியும்,” என்றார் அவர்.

மேலும், வேலையிடங்களில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து பலர் கவலை கொண்டுள்ளதைச் சுட்டினார் டாக்டர் ஃபைஷால்.

“மலாய்/முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல வேலைவாய்ப்புகளை உறுதிசெய்ய நாம் வழிகளைக் கண்டறிவது அவசியம்,” என்றார் அவர்.

புதிய மீட்சிக் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சக்தியாண்டி சுப்பாட், டாக்டர் வான் ரிசால் வழிநடத்துவர்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு சக்தியாண்டி, மூன்று முக்கியக் கூறுகளுக்கு மீட்சிக் குழு முன்னுரிமை அளிக்கும் என்றார்.

“முக்கியத் துறைகளையும் புதிய வளர்ச்சிப் பகுதிகளையும் கண்டறிதல், பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவளித்தல், செயல்படுத்தக்கூடிய வழிமுறைகளை உருவாக்குதல் ஆகிய மூன்றிலும் குழு கவனம் செலுத்தும்,” என்றார்.

மெண்டாக்கி உயர்கல்விக் கட்டண மானியத் திட்டத்தில் மாற்றங்கள்

மலாய்/முஸ்லிம் சமூகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் மற்றொரு பகுதியாக மெண்டாக்கி உயர்கல்விக் கட்டண மானியத் திட்டம் (TTFS) மேம்படுத்தப்படும்.

2026/2027 கல்வி ஆண்டிலிருந்து அனைத்து நிலைகளிலும் வருமானத் தகுதி அளவுகோல்கள் உயர்த்தப்படும்.

100 விழுக்காட்டு மானியத் திட்டத்திற்குத் தகுதிபெறும் குடும்பங்களின் தனிநபர் வருமான உச்சவரம்பு $1,700க்கு உயர்த்தப்படுகிறது. இதற்குமுன் அது $1,400ஆக இருந்தது.

அதேபோல, 75 விழுக்காட்டு மானியத் திட்டத்துக்குத் தகுதிபெரும் குடும்பங்களின் வரம்பு $1,700லிருந்து $2,000ஆகவும் 50 விழுக்காட்டு மானியத் திட்டத்துக்குத் தகுதிபெறும் குடும்பங்களின் வரம்பு $2,000லிருந்து $2,200ஆகவும் உயர்கிறது.

$2,400 வரை தனிநபர் வருமானம் உள்ள மலாய் குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 விழுக்காட்டு மானியக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த ஐந்தாண்டுகளாக கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் மானியத் திட்டம் மூலம் பயனடைகின்றனர் என்று தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

“எந்தவொரு மலாய்/முஸ்லிம் மாணவரும் நல்ல கல்வியைப் பெறுவதில் தடங்கலை எதிர்கொள்ள மாட்டார் என்பதை இந்த மாற்றங்கள் உறுதிசெய்யும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்