மின்வாகனப் பாதுகாப்புக் கவலைகள்: சட்டவிரோத மாற்றம், அங்கீகரிக்கப்படாத பழுதுபார்ப்பு

மின்வாகனப் பாதுகாப்புக் கவலைகள்: சட்டவிரோத மாற்றம், அங்கீகரிக்கப்படாத பழுதுபார்ப்பு

2 mins read
7881137e-5191-4d5c-be61-04f1b86acc0a
(இடமிருந்து) ஏசியா நியூஸ் நெட்வொர்க் நிறுவன ஆசிரியரும் கலந்துரையாடலின் நெறியாளருமான ஷெஃபாலி ரேக்கி, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைமைச் செயலதிகாரி லாம் வீ ஷான், பிஒய்டி சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் இங், ‘எஸ்ஜிகார்மார்ட்’ ஆசிரியர் ஜூலியன் கோ, ‘டம்கிரியேட்’ முதன்மை அறிவியலாளர் டோபியாஸ் மாசியர், ‘வோல்ட்பிரிட்ஜ்’ மின்வாகனத் தளத்தைச் சேர்ந்த டைரன் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோத மாற்றங்களும் அங்கீகரிக்கப்படாத பழுதுபார்ப்புகளும் மின்வாகனங்களின் தொடர்பில் தொடர்ந்து நீண்டகாலமாக இருந்துவரும் பாதுகாப்புக் கவலைகளாகும்.

அத்தகைய மாற்றங்கள் எரிபொருள் மூலம் ஆற்றலை உருவாக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், மின் வாகனங்களைப் பொறுத்தவரை அதன் விளைவுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

அந்தக் கருத்தை பிஒய்டி சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் கிளையின் நிர்வாக இயக்குநரான ஜேம்ஸ் இங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மார்ச் 27ஆம் தேதி நடத்திய வட்டமேசைக் கலந்துரையாடலில் முன்வைத்தார்.

காரை வாங்கிய பிறகு, அதில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் மாற்றங்களைச் செய்யவேண்டாம் எனத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிஒய்டி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என அவர் கூறினார்.

அதேபோல, விபத்துக்குள்ளாகும் மின்வாகனங்களை அங்கீகரிக்கப்படாத இடங்களில் பழுதுபார்ப்பது பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அது வாகனம் தீப்பிடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்றும் திரு இங் தெரிவித்தார்.

மின்வாகனங்களில் ஏற்படும் தீ, மற்ற வாகனங்களைவிட அதிக வேகமாகவும் நீண்ட நேரமாகவும் எரியக்கூடியவை. மேலும், அணைக்கப்பட்ட பிறகும் மீண்டும் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது.

விபத்தில் சிக்கிய மின்வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளை வகைப்படுத்த தெளிவான விதிகள் அவசியம் என்றார் திரு இங்.

அக்கலந்துரையாடலில் பங்கேற்ற மற்ற நிபுணர்களும் மின்வாகனத் தீ விபத்துகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்துச் சுட்டிக்காட்டினர்.

மேலும், மின்னூட்டத் தரநிலைகளைப் பின்பற்றுதல், தீயணைப்பு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் மின்வாகனத் தீ விபத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாளுதல் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைமை நிர்வாகி சலாம் வீ ஷான், மின்னூட்டிகள் தேசிய தரநிலைகளுக்கு உடன்பட்டிருப்பதை உறுதிசெய்வதில் ஆணையம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மின்வாகனத் தீ விபத்துகளைக் கையாள்வதற்கான நெறிமுறைகளை ஆராய்வதற்கு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து ஆணையம் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்