மனைவி, மகளைத் துன்புறுத்தி காவலர்மீது சுடுதண்ணீர் ஊற்றிய முதியவருக்குச் சிறை

மனைவி, மகளைத் துன்புறுத்தி காவலர்மீது சுடுதண்ணீர் ஊற்றிய முதியவருக்குச் சிறை

2 mins read
46653421-4239-4db6-bc31-cf48fada9b90
74 வயது முதியவருக்கு மே 28 அன்று ஈராண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனைவி, மகளைத் தாக்கித் துன்புறுத்தியதுடன், உதவிக்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றிய 74 வயது முதியவருக்கு நீதிமன்றம் ஈராண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மனைவி, இரண்டு மகள்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்த முதியவரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 60 வயது மனைவிக்கு, குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு கடந்த 2003ஆம் ஆண்டிலேயே நீதிமன்றம் தனிநபர் பாதுகாப்பு ஆணை வழங்கியிருந்தது. 

இருப்பினும், 2024 ஜனவரியில், முதியவருக்கும் அவரது மகள்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தடுக்க முயன்ற மனைவியின் முகத்தில் ஆடவர் தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவியின் முக எலும்பில் முறிவு ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, ஆடவர் சொந்தப் பிணையில்  வெளியே இருந்த சமயத்தில், மீண்டும் தனது மகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமுற்ற மகள் அவசர உதவிக்காகப் காவல் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காவலர்மீது தாக்குதல்

பாதிக்கப்பட்டவரின் அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள், முதியவரைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த கொதிக்கும் சுடுதண்ணீரை எடுத்து அந்த இரு அதிகாரிகள் மீதும் ஊற்றித் தாக்கியுள்ளார்.

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்துக் காயம் விளைவித்தது, மனைவியைத் தாக்கியது, நீதிமன்றத்தின் பாதுகாப்பு உத்தரவை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்