சிறந்த ‘ஏஐ’ பயன்பாட்டுக்கு நிறுவனங்களும் ஊழியர்களும் இணைவது அவசியம்

சிறந்த ‘ஏஐ’ பயன்பாட்டுக்கு நிறுவனங்களும் ஊழியர்களும் இணைவது அவசியம்

3 mins read
351a047b-7bc9-46c3-bdce-0c6d26242dee
மனிதத் தோற்றத்திலான ‘ஜி1’ எனும் இயந்திர மனிதனைப் பற்றிக் கேட்டறிகிறார் அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துவது ஊழியர்கள், நிறுவனத்தார் இருவரின் கைகளிலும் உள்ளது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

அதன் தொடர்பில் ‘ஏஐ’ திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஊழியர்கள், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நிறுவனங்கள் என இரு தரப்பும் ஒன்றிணைவது முக்கியம் என்றார் அவர்.

இவ்வாண்டு (2026) வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் கண்ட தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம் இவ்விரண்டு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சின் செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்புகள், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் தொடர்பில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் அமைச்சர் ஜோசஃபின் டியோ. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம், பணிப்பாதுகாப்பு குறித்த ஊழியர்களின் பதற்றம் ஆகியவற்றின் தொடர்பில் தமிழ் முரசின் கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அவர் விடையளித்தார்.

“2000ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்திலிருந்து ஊழியர்களிடம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம், வேலைவாய்ப்புகளைப் பொறுத்தே அமைகிறது எனத் தெரிந்துகொண்டேன். அதற்கேற்ப வணிகத் துறையினரும் தங்களை மேம்படுத்திக்கொள்வது முக்கியமானது,” என்றார் திருவாட்டி டியோ.

“ஊழியர்களை வெறும் செயற்கை நுண்ணறிவுப் பயனர்களாகக் கருதாமல், தங்கள் துறையில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்வோராக உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இது கடினமானதல்ல. காலப்போக்கில் இது மிக எளிய பணியாக மாறிவிடும்,” என்றும் நம்பிக்கையளித்தார் அமைச்சர் டியோ.

தொடக்கக்கால ஊழியர்களின் கவலை

வேலைவாய்ப்புக் குறித்துத் திருவாட்டி டியோ விரிவாகப் பேசினார். ஆரம்பக்கால ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்துவதாக அவர் சொன்னார்.

தொடக்கநிலை ஊழியர்கள் இனி தேவையில்லை என்ற கருத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை அமைச்சர் டியோ சுட்டினார்.

“செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் வேலைகளை விரைவாகச் செய்ய உதவக்கூடும் என்பது உண்மைதான். அவ்வகைக் கருவிகளை வடிவமைப்பதைவிட, அவற்றைப் பயன்பாட்டில் உள்ள வேலைத்திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதில் அதிகச் சிக்கல் நிலவுகிறது,” என்றார் அவர்.

நிறுவனங்கள் இதனைச் சமாளிக்கும் வழிகளைக் கண்டறியும் வரை, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் முழுமையாக இருக்காது என்றும் மென்பொருள் பொறியாளர்களுக்கு வேலையே இருக்காது எனும் சூழல் இன்னும் உருவாகவில்லை என்றும் திருவாட்டி டியோ சொன்னார்.

குறிப்பிட்ட வழியில் வேலை செய்து பழகியவர்களுக்கு, அத்தகைய பழக்கத்தை முற்றிலுமாக மாற்றும் வகையில் சிந்திப்பது எளிதல்ல; ஆனால், புதிதாகச் சேரும் ஊழியர்கள் ‘மாற்றத்துக்கான தூதுவர்களாகச்’ செயல்பட முடியுமென்று அவர் சுட்டினார்.

நடுத்தர, மூத்த ஊழியர்களின் சவால்கள்

“மூத்த, அனுபவமுள்ள ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவாற்றல் அதிகம் இருந்தாலும் அத்திறன்களைப் பயன்படுத்துவதற்கும் தற்போதுள்ள நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனம் தயாராக இருக்கிறதா என்பது முக்கியம். நிறுவனம் ஊழியரின் திறன்களை அங்கீகரிக்கத் தவறினால் அவர் வேறொரு போட்டி நிறுவனத்திற்குச் செல்லக்கூடும்,” என்றார் அமைச்சர் டியோ.

மாறிவரும் சூழலுக்கேற்பத் திறன் மேம்பாட்டில், மனிதவள அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவை இணைந்து கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். அது வேலை தேடுபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பணி வடிவமைப்புகளை மாற்றுவதில் உதவியாக இருக்கும் என்றும் திருவாட்டி டியோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைவாய்ப்புபணியாளர்ஊழியரணி