இரண்டாவது காலாண்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் குறைந்தது

இரண்டாவது காலாண்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் குறைந்தது

2 mins read
0ddd3e38-b011-47ab-8ba5-9cf79ba8f1bd
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பொருளியல் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் பொருளியல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப எழுச்சியால் தொடர்ந்து பயனடைந்து வந்தாலும், கட்டுமானம் மற்றும் மொத்த விற்பனைத் துறைகளின் வளர்ச்சி குறைந்ததால், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பொருளியல் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது முந்தைய காலாண்டில் எட்டப்பட்ட 6.3 விழுக்காடு வளர்ச்சியைவிட குறைவாகும். பொருளியல் வளர்ச்சி வேகத்துக்கு கட்டுமானம் போன்ற துறைகள் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் கட்டுமானத்துறை ஆண்டு அடிப்படையில் 6.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இதற்கு முந்தைய காலாண்டில் அதன் வளர்ச்சி 12.9 விழுக்காடாக இருந்தது.

உற்பத்தித்துறையின் வளர்ச்சி தொடர்ந்து வலுவாக உள்ளது.

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்டு அடிப்படையில் அதன் வளர்ச்சி 12.2 விழுக்காடாகப் பதிவானது.

முதலாம் காலாண்டில் அதன் வளர்ச்சி 8 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பகுதிமின்கடத்திகள், பகுதிமின்கடத்தி உற்பத்திக்கான சாதனங்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தித்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே அண்மையில் மீண்டும் வெடித்துள்ள மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்திச் சந்தையில் பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த விநியோகத் தடைகள் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையிலுள்ள ரசாயனப் பிரிவையும் மொத்த விற்பனைத் துறையையும் பாதித்துள்ளன.

எரிசக்தி, சரக்குக் கட்டணங்களின் உயர்வு காரணமாக ஆண்டின் இரண்டாம் பாதியில் உள்நாட்டுத் தேவையின் வேகம் குறையக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆயினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான உலகளாவியத் தேவையும் வட்டார விநியோகக் கட்டமைப்பில் சிங்கப்பூரின் முக்கியத்துவமும் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து கணக்கிடப்படும் அடிப்படைப் பணவீக்கம், மே மாதம் 1.4 விழுக்காடாகப் பதிவானது. இது, ஏப்ரல் மாத நிலவரத்தையே பிரதிபலித்தது.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்செயற்கை நுண்ணறிவுஉற்பத்திமொத்த விற்பனை

தொடர்புடைய செய்திகள்