சிங்கப்பூர் தனது பொருளியல் வளர்ச்சி எதிர்பார்ப்பை இன்னும் அதிக அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
2026ஆம் ஆண்டு முழுவதும் இரண்டு முதல் நான்கு விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று புதிய கணிப்பு கூறுகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் பொருளியல் சிறப்பாகச் செயல்பட்டதன் எதிரொலியாக இந்தக் கணிப்பு இடம்பெறுகிறது.
வர்த்தக, தொழில் அமைச்சு, செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) இந்த விவரங்களை வெளியிட்டிருந்தது.
முந்தைய கணிப்பான ஒரு விழுக்காடு முதல் மூன்று விழுக்காடு வரையிலான பொருளியலைவிட, 2026ல் வளர்ச்சி கூடுதலாக இருக்கும் என்று அது தெரிவித்தது.
2025ல் பொருளியல், ஐந்து விழுக்காடு வளர்ச்சி கண்டதாகக் கூறிய அமைச்சு, இதற்கு முன்பு ஜனவரியில் முன்னுரைக்கப்பட்ட 4.8 விழுக்காடு வளர்ச்சியை அது மிஞ்சியிருந்ததைச் சுட்டிக்காட்டியது.
2025ல் ஆண்டு அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி, நான்காம் காலாண்டில் 6.9 விழுக்காடாகக் கூடியதைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டிலும் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025ல், முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.7 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. மேலும் மூன்றாம் காலாண்டின் 4.6 விழுக்காடு வளர்ச்சியைவிட அது அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் பதிவான ஐந்து விழுக்காடு வளர்ச்சி, 2024ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 5.3 விழுக்காட்டைவிட சற்றுக் குறைவாகும். 2024ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய மதிப்பீட்டான 4.4 விழுக்காட்டிலிருந்து உயர்த்தப்பட்டது.
உற்பத்தித் துறை, மொத்த விற்பனை, நிதி, காப்புறுதித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டதால், 2025ல் வளர்ச்சி அதிகரித்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு மேலும் கூறியது.
கடைசியாக, 2021ஆம் ஆண்டில் பொருளியல் வேகமாக வளர்ந்தது. அப்போது அது கொவிட்-19 தொற்று நோயிலிருந்து மீண்டு 9.8 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.

