இபோலா தொற்று: காங்கோவுக்கும் உகாண்டாவுக்கும் $2.5மி. சிங்கப்பூர் உதவி

இபோலா தொற்று: காங்கோவுக்கும் உகாண்டாவுக்கும் $2.5மி. சிங்கப்பூர் உதவி

1 mins read
அனைத்துலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலை: சுகாதார அமைச்சர் ஓங்
165e564e-c917-4fdf-af05-589529d9a05f
காங்கோவின் ருவம்பாரா எனும் பகுதியில் நோயாளியை மருத்துவ வாகனத்தில் இருந்து இறக்கும் சுகாதாரப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இபோலா தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக காங்கோ ஜனநாயக் குடியரசுக்கும், உகாண்டாவுக்கும் சிங்கப்பூர் S$2.5 மில்லியன் உதவித் தொகையை அந்நாடுகளுக்கு வழங்கவுள்ளது.

உலக சுகாதார நிநுவனம் (WHO), ஆப்பிரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்கள் (Africa CDC) ஆகிய இரு அமைப்புகளின் வழியாக அந்தத் தொகை அனுப்பப்படும். அவ்விரு அமைப்புகளும் இணைந்து கண்டங்கள் அளவிலான தயார்நிலை, எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டத்தை ஜூன் மாதம் 5ஆம் தேதி தொடங்கின.

மருத்துவ ஆய்வகத்தில் நடக்கும் சோதனைகள், தொற்றுநோய் பாதித்துள்ளோரின் தொடர்புகளைக் கண்டறிதல், தொற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், நோயாளிகளை நிர்வகித்தல் போன்ற பற்பல செயல்பாடுகளுக்கு அந்த உதவித் தொகை பயன்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சும் (MOH) தொற்றுநோய் அமைப்பும் (CDA) செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வெளியிட்டக் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தற்போது ஏற்பட்டுள்ள தொற்று, அனைத்துலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனத்தால் மே மாதம் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அன்று பெறப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட இபோலா நோயாளிகளின் எண்ணிக்கை காங்கோவில் 1,926 என உயர்ந்துள்ளது. அவர்களில் 702 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.

அனைத்துலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலையை உகாண்டாவிலும் காங்கோவிலும் பரவிவரும் தற்போதைய தொற்று ஏற்படுத்திவிட்டதாக சுகாதார அமைச்சர் ஒங் யி காங் அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டார்.

அவ்விரு நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்று, இபோலா புன்டிபுக்யா (BVD) வகை கிருமியால் பரவுகிறது.

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சுஓங் யி காங்உகாண்டாகாங்கோநிதி உதவிசிங்கப்பூர்உலக சுகாதார நிறுவனம்தொற்றுநோய் அமைப்பு