சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்ததால் $300 மில்லியன் மிச்சம்

நிலத்தடிக் கட்டுமானத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடு

சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்ததால் $300 மில்லியன் மிச்சம்

2 mins read
497ced63-dbfa-4fb7-ad50-b34da98d7723
சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட மேயர்கள் கருத்தரங்கில்’ தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நிலத்தடிக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரக்கூடிய சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகாணும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் ஈராண்டுகளாக ஏறத்தாழ $300 மில்லியன் தேவையற்ற செலவு தவிர்க்கப்பட்டுள்ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

உலக நகரங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துக் கலந்துரையாடிய, ‘உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட மேயர்கள் கருத்தரங்கில்’ அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுவாக, குழிதோண்டி நிலத்திற்கு அடியில் அதன் உறுதியைச் சோதிக்கும் முறைகளுடன் மின்காந்த இருப்பிடங்காட்டிகள், நிலத்திற்குள் ஊடுருவிக் கண்டறியும் ரேடார் கருவிகள் உட்பட நிலத்தைத் தோண்டாமல் சோதனைசெய்யும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டினார். சோதனைகள், சாலையைப் பயன்படுத்துவோர்க்கு இடையூறாக அமைவதை இந்த வழிமுறைகள் தடுப்பதாகவும் அமைச்சர் சீ சொன்னார்.

நிலத்திற்குள் ஊடுருவிக் கண்டறியும் ரேடார் கருவி.
நிலத்திற்குள் ஊடுருவிக் கண்டறியும் ரேடார் கருவி. - படம்: எச்எஸ்சி பைப்லைன் எஞ்சினியரிங் நிறுவனம்

இத்தகைய வழிமுறைகளை மேலும் பரவலாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சன்டெக் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அமைச்சர் சீ பேசினார்.

“சிங்கப்பூரில் நிலவளம் குறைவாக உள்ளதால் அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது முக்கியம். குறிப்பாக, நகரின் நிலத்தடியில் அமைந்துள்ள பயனீட்டுக் கட்டமைப்புக்குக் கவனமான திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுகின்றன,” என்றார் அவர்.

தாமதம், கூடுதல் செலவு, திட்ட இடையூறுகள், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் உள்ளிட்ட சவால்களைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களைச் சிங்கப்பூர் செயல்படுத்துவதை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

2024ஆம் ஆண்டிலிருந்து நகர மறுசீரமைப்பு ஆணையம், நிலத்தடிக் கட்டுமானத் திட்டங்களைச் சீராக முன்னெடுத்துச் செல்லும் பணிகளைச் செய்துவருவதாகத் திரு சீ சுட்டினார். இதுவரை ஏறக்குறைய 272 கிலோமீட்டருக்கான பயனீட்டுப் பாதைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் திட்டக் குழுக்கள், பணிகள் நிறைவடைந்தவுடன் பயனீட்டுத் தரவுகள், அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் என அனைத்தையும் சமர்ப்பிக்க ஏதுவாக, சிங்கப்பூர் நில ஆணையம் ஒன்றிணைந்த தளத்தை உருவாக்கிவருகிறது,” என்றார் திரு சீ.

தற்போது, தெரிவுசெய்யப்பட்ட சில திட்டங்களில் அது சோதிக்கப்படுகிறது என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது விரிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அது காலப்போக்கில் முக்கியத் தகவல்கள் குறித்த பதிவுகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் என்றும் அதற்குரிய செயல்முறைகள் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டினார்.

நிலத்தடி வளம் குறித்த நம்பகமான, தெளிவான தகவல்களுக்குரிய கட்டமைப்பை உருவாக்குவது, உலகின் பல நகரங்களின் முக்கியச் சவாலாய் இருப்பதாக அவர் சொன்னார். இதனை உருவாக்க அத்துறையின் நிபுணர்களும் பங்காளித்துவ அமைப்பினரும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்பதையும் அமைச்சர் சீ வலியுறுத்தினார்.

“நிலத்தடி வளப் பதிவுகளை உருவாக்குவதற்குப் பல்வேறு நாடுகளின் அனுபவங்களைத் தொகுத்து, அனைத்துலக அளவிலான சிறந்த நடைமுறைகளின் வழிகாட்டிப் புத்தகமாக மாற்றும் நோக்கில், சிங்கப்பூர் நில ஆணையம் நிபுணர்களை ஒன்றிணைத்தது. அந்த வழிகாட்டிப் புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

“இது உலகின் அனைத்து நகரங்களுக்கும் பயன்படுவதோடு நிலத்தடிப் பயன்பாட்டுத் தரவுகளைச் சிறப்பாக நிர்வகிப்பது குறித்த தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்திற்கான அடித்தளமாகவும் இருக்குமென நம்புகிறோம்,” என்றார் திரு சீ.

குறிப்புச் சொற்கள்
தேசிய வளர்ச்சி அமைச்சுசீ ஹொங் டாட்நிலப் போக்குவரத்து ஆணையம்

தொடர்புடைய செய்திகள்